sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாமல்லை கடற்கரை, சிற்ப பகுதி பாதுகாப்பில்...அலட்சியம்!:பராமரிப்பின்றி 'சிசிடிவி' கேமராக்கள் பழுது

/

மாமல்லை கடற்கரை, சிற்ப பகுதி பாதுகாப்பில்...அலட்சியம்!:பராமரிப்பின்றி 'சிசிடிவி' கேமராக்கள் பழுது

மாமல்லை கடற்கரை, சிற்ப பகுதி பாதுகாப்பில்...அலட்சியம்!:பராமரிப்பின்றி 'சிசிடிவி' கேமராக்கள் பழுது

மாமல்லை கடற்கரை, சிற்ப பகுதி பாதுகாப்பில்...அலட்சியம்!:பராமரிப்பின்றி 'சிசிடிவி' கேமராக்கள் பழுது


ADDED : செப் 25, 2024 12:35 AM

Google News

ADDED : செப் 25, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:பயணியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அங்கு, ஏற்கனவே அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் செயலிழந்து, மாயமான நிலையில் புதிதாக 'சிசிடிவி' கேமராக்கள் அமைப்பதில், சுற்றுலா மற்றும் தொல்லியல் துறையினர் அலட்சியமாக உள்ளனர்.



சர்வதேச பாரம்பரிய சுற்றுலா இடமாக, மாமல்லபுரம் விளங்குகிறது. பல்லவர் கால சிற்பங்கள், இயற்கைச்சூழல் கடற்கரை ஆகியவை இங்கு உள்ளன. உள்நாடு, சர்வதேச பயணியர், அவற்றை காண்கின்றனர்.

சென்னை அருகில் உள்ளதால், வார இறுதி, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில், சென்னையின் சுற்றுப்புற பகுதியினர், இங்கு படையெடுக்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல்


சுற்றுலா வளர்ச்சியடையாத 40 ஆண்டுகளுக்கு முன், பயணியர் வருகை குறைவு. உள்ளூர் மக்களை தவிர்த்து, பிற பகுதியினர் வருகையின்றி வெறிச்சோடியே காணப்படும்.

எனவே, கண்காணிப்பிற்கும் அவசியம் இல்லை. தற்போது சுற்றுலா வளர்ச்சியடைந்து, பயணியர் குவிகின்றனர். சுற்றுலா சார்ந்த தொழில்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், சிற்பங்கள், கடற்கரை, பிரதான சாலைகள் ஆகிய பகுதிகளில், 'சிசிடிவி' கண்காணிப்பு மிக இன்றியமையாதது. தொல்லியல் துறையின்கீழ், கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, பிற குடைவரைகள் என, 32 பாரம்பரிய சின்னங்கள் உள்ளன.

அத்துறையைச் சேர்ந்த நிரந்தர ஊழியர்கள், 20 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்தனர். சுற்றுலா பயணியர் சிற்பங்களை சேதப்படுத்தாமல், அவர்கள் கண்காணித்தனர்.

கடந்த 17 ஆண்டுகளாக, தனியார் நிறுவன பாதுகாவலர்களே பணியில் உள்ளனர். பயணியர் குவியும் சூழலில், அவர்கள் கண்காணிப்பு மட்டுமே போதாது.

சிற்பங்கள் பாதுகாப்பு மற்றும் பயணியர் கண்காணிப்பிற்கு, 'சிசிடிவி' கேமராக்கள் மிக அவசியம்.

இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, சிற்ப வளாகங்களில், 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்க, மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகத்தினர், தலைமையிடம் பரிந்துரைத்தனர். ஆனாலும், அத்திட்டம் செயல்படுத்தப்படாமல், தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இ.சி.ஆர்., எனப்படும் கிழக்கு கடற்கரை சாலையிலும், 'சிசிடிவி' கேமராக்கள் இல்லை. சென்னை - மாமல்லபுரம் இடையே, சுற்றுலா போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், பக்தர்கள் திரள்கின்றனர். முட்டுக்காடு சுற்றுலாத் துறை படகு குழாமில், பயணியர் படகு சவாரி செல்கின்றனர். கடற்கரை விடுதிகள் அதிகரித்துள்ளன.

குற்றம் அதிகரிப்பு


சென்னை அக்கரை - மாமல்லபுரம் இடையே, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன நான்கு வழிப்பாதை உள்ளது. மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிப்பாதையாக மேம்படுத்தப்படுகிறது.

சாலை வசதியால், புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு, இவ்வழியாக செல்லும் வாகனங்களும் அதிகரித்து உள்ளன.

கடலோர பகுதியில், சமூக விரோதிகள் அதிக அளவில் கூடுகின்றனர். அதனால், கொலை, வழிப்பறி, பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துள்ளன. பண்ணை வீடுகளில், மது விருந்து, உல்லாசம் போன்றவை அரங்கேறுகின்றன.

குற்றங்களை தவிர்க்க, இச்சாலை பகுதியை கண்காணிப்பது அவசியம். பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர், கடந்த 2019ல், மாமல்லபுரத்தில் சந்தித்தபோது, பாதுகாப்பு கருதி, இ.சி.ஆர்., சாலையில், குறிப்பிட்ட இடைவெளியில் 'சிசிடிவி' கேமரா நிறுவி கண்காணிக்கப்பட்டது.

நாளடைவில், அவை பழுதடைந்தன. அதன்பின் அவை மாற்றப்படவில்லை. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது, குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அமைக்கப்பட்டன.

கண்காணிப்பு இல்லை


பின், அவையும் செயலிழந்து, பாதுகாப்பு, கண்காணிப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. 100 கி.மீ., வேகத்திற்கு மேல் கடக்கும் வாகனங்களை கண்காணிக்க, மாமல்லபுரம், கிருஷ்ணன்காரணை, திருவிடந்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்களின் கண்காணிப்பு தவிர்த்து, பிற இடங்களில் கண்காணிப்பே இல்லை.

குறிப்பிட்ட இடைவெளியில், தொடர்ச்சியாக கேமரா அமைவது அவசியம். கடந்த 2017ல், மாமல்லபுரம் வந்த ஜெர்மன் நாட்டு பெண் பயணி, பட்டிபுலம் கடற்கரையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

சாலை பகுதியில் 'சிசிடிவி' கேமரா இல்லாததால், இவ்வழியாக சென்றவர்களை அடையாளம் காண இயலாமல், துப்பு துலக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

கேமராக்கள் மாயம்


மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதி கடற்கரையில், பயணியர் இரவு வரை அதிக அளவில் பொழுதை கழிக்கின்றனர். அவர்களிடம் அடிக்கடி வழிப்பறி நடக்கிறது.கடலில் குளித்து மகிழும் பயணியர், அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதை தவிர்க்க கருதி, சுற்றுலாத் துறை சார்பில், சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின்கீழ், கடற்கரை கோவிலின் தென்புற கடற்கரை பகுதியில், 40 சுழலும் கேமராக்கள் அமைக்கப்பட்டன.அவை அனைத்தும், சில மாதங்களில் பயனின்றி செயலிழந்து, காணாமலும் போனது. இங்கும், 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



ஸ்தலசயனர் கோவிலில் 'சிசிடிவி'


மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், 1998க்கு பின், கடந்த பிப்., 1ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவில் கண்காணிப்பிற்காக, ஏற்கனவே 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்ததால், அவை அகற்றப்பட்டன. பின் அவை செயலிழந்தன. கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பின், நாள்தோறும் பக்தர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் புதிதாக 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. அதைத் தொடர்ந்து, திருக்கோவில் நிதியில், சன்னிதிகள், மஹா மண்டபம், வெளிப்பிரகாரம், வெளிப்புற மண்டபம் ஆகிய இடங்களில், 17 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us