/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் கிராம நத்தம் குடியிருப்புக்கு 50 ஆண்டாக பட்டா வழங்காமல் இழுபறி
/
மாமல்லபுரம் கிராம நத்தம் குடியிருப்புக்கு 50 ஆண்டாக பட்டா வழங்காமல் இழுபறி
மாமல்லபுரம் கிராம நத்தம் குடியிருப்புக்கு 50 ஆண்டாக பட்டா வழங்காமல் இழுபறி
மாமல்லபுரம் கிராம நத்தம் குடியிருப்புக்கு 50 ஆண்டாக பட்டா வழங்காமல் இழுபறி
ADDED : பிப் 06, 2025 10:22 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் கிராமநத்தம் பகுதியில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்போருக்கு, தற்போது வரை மனைப்பட்டா வழங்கப்படாமல் இழுபறியாக உள்ளதால், அப்பகுதிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
மாமல்லபுரம் பேரூராட்சியில் உள்ள அண்ணாநகர் பகுதி, முன்பு ஒரே வார்டாக அமைந்திருந்தது.
தற்போது 9, 14 என, இரண்டு வார்டு பகுதிகளாக உள்ளன. இப்பகுதி புல எண் 160/2ல், கிராம நத்தமாக உள்ளது.
இப்பகுதியினர் இங்கு, 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம், வீடுகளுக்கு சொத்து வரி விதித்துள்ளது. குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்கடை ஆகிய வசதிகளையும் செயல்படுத்தி உள்ளது.
இப்பகுதி கிராம நத்தமாக இருந்தும், தற்போது வரை வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை.
பாரம்பரிய சிற்பங்கள் அருகில் உள்ள பிற குடியிருப்பு பகுதிகளுக்கு, வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இப்பகுதிக்கு மட்டும் தொல்லியல் துறை விதி காரணங்களால் பட்டா வழங்க இயலாது என, அரசு நீண்ட காலமாக மறுத்து வருகிறது.
சட்டசபை, லோக்சபா ஆகிய தேர்தல் பிரசாரத்தின் போது, பட்டா பெற நடவடிக்கை எடுப்பதாக, பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள் உறுதியளித்து, பின்னர் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டத்தில் விரைவில் ஆய்வுசெய்ய உள்ள நிலையில், தாலுகாதோறும் அரசு புறம்போக்கு இடத்தில் நீண்ட காலம் வசிப்பவர்களுக்கு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க, வருவாய்த் துறையினர் தீவிரமாக உள்ளனர். இச்சூழலில், மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதிக்கும், நிபந்தனைக்கு உட்பட்ட வீட்டுமனைப் பட்டா வழங்க, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
மாமல்லபுரம் அண்ணாநகரில் உள்ள வீடுகள், கிராம நத்தம் இடத்தில் இருந்தாலும், தொல்லியல் பகுதியாக உள்ளது. தற்போது நகர்ப்புற பகுதிகளில், பட்டா வழங்குவது குறித்து முடிவெடுக்கவும், அது தொடர்பாக புதிதாக உத்தரவிடவும், அந்தந்த பகுதி மக்கள் தொகை விபரங்களை அரசு பெற்றுள்ளது. புதிய உத்தரவை பொறுத்தே, இப்பகுதிக்கு பட்டா வழங்குவது குறித்து முடிவெடுக்க இயலும்.
இவ்வாறு, அவர் கூறினார்.