/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் புதிய பஸ் நிலையம் டிசம்பருக்குள் பணி முடிக்கப்படும்; சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தகவல்
/
மாமல்லபுரம் புதிய பஸ் நிலையம் டிசம்பருக்குள் பணி முடிக்கப்படும்; சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தகவல்
மாமல்லபுரம் புதிய பஸ் நிலையம் டிசம்பருக்குள் பணி முடிக்கப்படும்; சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தகவல்
மாமல்லபுரம் புதிய பஸ் நிலையம் டிசம்பருக்குள் பணி முடிக்கப்படும்; சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தகவல்
ADDED : செப் 24, 2025 03:09 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் புதிய பேருந்து நிலைய கட்டுமானத்தில், 65 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக கூறியுள்ள சி.எம்.டி.ஏ., நிர்வாகம், வரும் டிசம்பருக்குள் எஞ்சிய பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
பல்லவர் சிற்பங்கள் அமைந்துள்ள சுற்றுலா இடமாக, மாமல்லபுரம் விளங்குகிறது. இந்த பகுதியில் நிரந்தர பேருந்து நிலையம் இல்லாமல், குறுகிய திறந்தவெளி பகுதியில் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன.
இங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க, கடந்த 1992ம் ஆண்டில் திட்டமிட்டும், 32 ஆண்டுகளாக இழுபறியே நீடித்தது.
இந்நிலையில், சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், இங்குள்ள புதுச்சேரி சாலையை ஒட்டி, 90.50 கோடி ரூபாய் மதிப்பில், 6.80 ஏக்கர் பரப்பில், புதிய பேருந்து நிலையம் அமைக்கிறது.
முதல்வர் ஸ்டாலின், 2023 பிப்ரவரியில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக அடிக்கல் நாட்டி, பின்னர் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் கட்டுமானப் பணிகளை துவக்கினார்.
பேருந்து நிலையம் கீழ் தளம், தரை தளம், மேல்தளம் என அமைகிறது. கீழ் தளத்தில், 115 கார்கள், 365 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், அதன் டிக்கெட் அலுவலகம் உள்ளிட்டவை அமைகின்றன.
தரை தளத்தில், 40 பேருந்துகள் நிறுத்துமிடம், நான்கு கடைகள், இரண்டு ஏ.டி.எம்., மையங்கள், மருந்தகம், பயணியர் காத்திருப்பு அறை, பயணச்சீட்டு அலுவலகம் உள்ளிட்டவை அமைகின்றன.
முதல் தளத்தில் பேருந்து நிலைய அலுவலகம், பயணியர் தங்கும் அறை, ஓட்டுநர்கள் ஓய்வறை, உணவகம் உள்ளிட்டவை அமைகின்றன.
இப்பணிகளை திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, மாவட்ட கலெக்டர் சினேகா ஆகியோருடன் அமைச்சர் அன்பரன் பார்வையிட்டார்.
சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், 65 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதாகவும், எஞ்சிய பணிகள் வரும் டிச., மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும், அமைச்சரிடம் தெரிவித்தனர்.