/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அதிகாலையில் பஸ் இயக்காததால் மாமல்லபுரம் பயணியர் தவிப்பு
/
அதிகாலையில் பஸ் இயக்காததால் மாமல்லபுரம் பயணியர் தவிப்பு
அதிகாலையில் பஸ் இயக்காததால் மாமல்லபுரம் பயணியர் தவிப்பு
அதிகாலையில் பஸ் இயக்காததால் மாமல்லபுரம் பயணியர் தவிப்பு
ADDED : பிப் 16, 2025 08:45 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரத்திலிருந்து, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு காலையில் பேருந்துகள் இல்லாமல், பயணியர் அவதிப்படுகின்றனர்.
மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர் தினமும் அரசு, தனியார் நிறுவன பணி, உயர் கல்வி உள்ளிட்டவற்றுக்காக, மாமல்லபுரத்திலிருந்து பிற இடங்களுக்குச் செல்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன், கல்பாக்கம் - சென்னை இடையே, கிழக்கு கடற்கரை சாலை வழியாக, தடம் எண் 118, பழைய மாமல்லபுரம் சாலை வழியாக, தடம் எண் 119 ஆகிய அரசு பேருந்துகள், அதிகாலை 4:00 மணி முதல் இயக்கப்பட்டன. அதேபோன்று, மாமல்லபுரம் - செங்கல்பட்டு தடத்தில், தடம் எண் '121ஏ', தடம் எண் '212எச்' ஆகிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இப்பேருந்துகள், பல ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டன. தற்போது கிழக்கு கடற்கரை சாலை தடத்தில், மாநகர் பேருந்து முதல் நடையே, காலை 6:30 மணிக்குப் பிறகே புறப்படுகிறது.
பழைய மாமல்லபுரம் சாலை, செங்கல்பட்டு தடங்களில், முற்றிலும் பேருந்துகள் இல்லை.
சென்னை பகுதிக்கு, அதிகாலையில் செல்பவர்கள், புறவழி சந்திப்பு சென்று, புதுச்சேரியிலிருந்து வரும் பேருந்தில், நெரிசலில் பயணித்து அவதிப்படுகின்றனர்.
அந்த பேருந்துகள் புறப்பட்ட இடத்திலிருந்தே கூட்ட நெரிசலுடன் வருவதால், பெரும்பாலான பேருந்துகள், இங்கு நிற்காமலேயே செல்கின்றன. இதனால், மாமல்லபுரம் பகுதி பயணியர் அவதிப்படுகின்றனர்.
எனவே, கல்பாக்கத்திலிருந்து அதிகாலை பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் அல்லது மாமல்லபுரத்தில் மாநகர் பேருந்துகளை இரவில் நிறுத்தி, அதிகாலை முதல் இயக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.