/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவி விலகக்கோரி போராட்டம்
/
மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவி விலகக்கோரி போராட்டம்
மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவி விலகக்கோரி போராட்டம்
மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவி விலகக்கோரி போராட்டம்
ADDED : அக் 15, 2024 02:06 AM

திருப்போரூர்,-திருப்போரூர் ஒன்றியம், வண்டலுார் வட்டத்தில் அடங்கிய மாம்பாக்கம் ஊராட்சி தலைவராக வீராசாமி என்பவர் உள்ளார்.
தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்களிடையே கருத்தொற்றுமை இல்லாமல், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி, கவுன்சிலர்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அப்போதைய கலெக்டர் ராகுல்நாத், ஊராட்சி தலைவர் வீராசாமி, துணைத்தலைவர் லோகேஸ்வரியின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்தார்.
பின், மேல்முறையீடு நடவடிக்கையாக, கடந்த மூன்று மாதங்களுக்கு முன், துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் 6 பேரும், ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, தற்போதைய கலெக்டர் அருண்ராஜிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, கடந்த 9ம் தேதி, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா தலைமையில், ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், துணைத்தலைவர் உள்ளிட்ட 6 வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்று, ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லை என, தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் கையெழுத்து அளித்தனர்.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மான அறிக்கையை, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா, கலெக்டருக்கு அனுப்பினார்.
இந்நிலையில், நேற்று மாம்பாக்கம் ஊராட்சி சார்ந்த துணைத்தலைவர், வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர், ஊராட்சி தலைவர் வீராசாமியை பதவி நீக்கக் கோரி, பி.டி.ஓ., அலுவலகம் வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மேலும், ஊராட்சி தலைவருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷம் எழுப்பினர். பின், பி.டி.ஓ., சிவகலைச்செல்வனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாம்பாக்கம் ஊராட்சியில், தலைவர் வீராசாமி மக்களுக்கு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். நிதி முறைகேடு செய்ததால் தான், ஓராண்டுக்கு முன்பே, அவரின் செக் பவர் நிறுத்தப்பட்டது.
இது சம்பந்தமாக அவர் தொடுத்த வழக்கை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இது சம்பந்தமாக வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு, கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதனை திசை திருப்பும் விதமாக, உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை, மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார். எனவே, இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற பி.டி.ஓ., சிவகலைச்செல்வன், புகார் மனுவை கலெக்டருக்கு அனுப்பி வைப்பதாகவும், கலெக்டர் எடுக்கும் முடிவு இறுதியானது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்தனர். பின், செங்கல்பட்டில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டரிடம் மனு அளிக்க புறப்பட்டனர்.