/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எரிசாராயம் பதுக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
/
எரிசாராயம் பதுக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
ADDED : மார் 28, 2025 09:46 PM
செங்கல்பட்டு:விற்பனைக்காக எரி சாராயம் பதுக்கிய வழக்கில், சாராய வியாபாரிக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு கோர்ட் தீர்ப்பளித்தது.
கல்பாக்கம், கூவத்துார் அடுத்த பரமன்கேணி கிராமம், உப்பங்கழிவேலி முட்புதர் உள்ளது. இங்கு, எந்தவித அரசு உரிமமும் இல்லாமல் சட்டவிரோதமாக 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று வெள்ளை நிற பிளாஸ்டிக் கேன்களில், தலா 35 லிட்டர் வீதம் மொத்தம் 105 லிட்டர் விஷ நெடியுடன் கூடிய எரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
தகவலறிந்து சென்ற மாமல்லபுரம் மதுவிலக்கு போலீசார், எரி சாராயத்தை பறிமுதல் செய்து, பரமன்கேணி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 59, என்பவரை கைது செய்து, கடந்த ஆண்டு மே மாதம் 29ம் தேதி, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.
வழக்கில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், பன்னீர்செல்வத்திற்கு இரண்டு ஆண்டுகள் மெய்க்காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.