/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தவருக்கு கழுத்தில் கத்திக்குத்து
/
காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தவருக்கு கழுத்தில் கத்திக்குத்து
காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தவருக்கு கழுத்தில் கத்திக்குத்து
காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தவருக்கு கழுத்தில் கத்திக்குத்து
ADDED : நவ 02, 2025 01:27 AM
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தவரை, எதிர் தரப்பைச் சேர்ந்த வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அச்சிறுபாக்கம் அருகே பாதிரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 25. எலப்பாக்கம் அடுத்த மதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 34.
இவர்கள் இருவருக்கும், கடந்த ஒரு மாதத்திற்கு முன், எலப்பாக்கம் அருகே பிண்ணம்பூண்டி பகுதியில் வாய்த்தகராறு ஏற்பட்டு, மோதலில் முடிந்தது.
இருவரையும் கைது செய்த அச்சிறுபாக்கம் போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்தில், இருவரும் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து, அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளனர்.
நேற்று வழக்கம் போல, காலை 8:00 மணியளவில் வினோத்குமார், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றுள்ளார். கையெழுத்து போட்டுவிட்டு, காவல் நிலைய வாசற்படியை கடந்து வந்து உள்ளார்.
அப்போது கையெழுத்திட காவல் நிலையத்திற்கு வந்த விஜயகுமார், தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால், வினோத்குமாரின் கழுத்துப் பகுதியில் குத்தி உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த வினோத்குமாரை போலீசார் மீட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின், விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்து, காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கின்றனர்.
இச்சம்பவம், அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

