sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குண்டூர் ஏரியை ரூ.2.94 கோடியில் சீரமைக்கும் பணி... மந்தம் துார்வாரி விரைந்து முடிக்க நீர்வளத்துறைக்கு உத்தரவு

/

குண்டூர் ஏரியை ரூ.2.94 கோடியில் சீரமைக்கும் பணி... மந்தம் துார்வாரி விரைந்து முடிக்க நீர்வளத்துறைக்கு உத்தரவு

குண்டூர் ஏரியை ரூ.2.94 கோடியில் சீரமைக்கும் பணி... மந்தம் துார்வாரி விரைந்து முடிக்க நீர்வளத்துறைக்கு உத்தரவு

குண்டூர் ஏரியை ரூ.2.94 கோடியில் சீரமைக்கும் பணி... மந்தம் துார்வாரி விரைந்து முடிக்க நீர்வளத்துறைக்கு உத்தரவு


ADDED : மார் 31, 2025 11:38 PM

Google News

ADDED : மார் 31, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டில் உள்ள குண்டூர் ஏரியை, 2.94 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீரமைப்பு பணியை வேகப்படுத்தி, ஏரியை துார் வர வேண்டுமென நகராட்சி நிர்வாகம், நீர்வளத் துறைக்கு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

செங்கல்பட்டு நகரின் மையப்பகுதியில், 42 ஏக்கர் பரப்பளவில், குண்டூர் ஏரி அமைந்துள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் நீரை பயன்படுத்தி, விவசாயம் நடந்து வந்தது.

நாளடைவில் விவசாய நிலங்களில் வீடுகள் உருவாக்கப்பட்டன.

தற்போது இந்த ஏரி, குடியிருப்பு பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்திற்காக, ஏரியில் இருந்து கடந்த 1987ம் ஆண்டு, ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.

அப்போது, ஏரி கலங்கலை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். உபரிநீர் வெளியேறுவதை தடுக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் பள்ளிக்கு விதிக்கப்பட்டன.

அதன் பின், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான இடத்தை விலைக்கு வாங்கி, அலுவலகம் கட்டியது. இதுமட்டுமின்றி, ஐந்து ஏக்கருக்கும் மேல் தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.

இதனால் தற்போது, ஏரியின் பரப்பளவு 29 ஏக்கராக குறைந்துள்ளது. ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள மும்மலைகளில் இருந்தும், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர் பகுதிகளிலிருந்தும் ஏரிக்கு நீர்வரத்து உள்ளது.

ஏரியின் பரப்பளவு குறைந்ததால், மழைக்காலத்தில் ஏரி விரைவில் நிரம்பி விடுகிறது. அருகிலுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குண்டூர் ஏரியில் கலக்கிறது.

இந்த ஏரியின் கலங்கலில் இருந்து உபரிநீர் வெளியேறி, தனியார் பள்ளி தடுப்புச்சுவர் வழியாக ராகவனார் தெரு, வேதாசலம் நகர், ஜி.எஸ்.டி., சாலை வழியாக, கொளவாய் ஏரியில் கலக்கிறது.

மேலும், ஏரிக்கரை மற்றும் ஏரி பகுதியில், ஆக்கிரமிப்பு வீடுகள் அதிகரித்துள்ளன. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் அதிகரிக்கும் போது, மர்ம நபர்கள் கரையை உடைத்து விடுகின்றனர்.

இதன் காரணமாக, ஏரியில் தண்ணீர் சேமிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. ஏரியும் பல ஆண்டுகளாக துார்வரப்படாமல் உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இதை தவிர்க்க, செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்றம் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், ஏரியை துார் வாரி ஆழப்படுத்தவும், கரையை பலப்படுத்தி நடைபாதை அமைக்கவும், நீர்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏரியை துார் வாரி சீரமைக்க நிதி கேட்டு, அரசுக்கு நீர்வளத்துறை கருத்துரு அனுப்பியது. ஆனால் நிதி ஒதுக்காததால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், ஏரியை துார் வாரி சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் அனுமதி கோரியது.

நீர்வளத் துறையின் அனுமதியை தொடர்ந்து, கடந்த 2022 - 23ல், மத்திய அரசு திட்டமான 'அம்ரூத்' திட்டத்தில், 2 கோடியே 94 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டத்தில் ஏரி கரைகளை பலப்படுத்துதல், சுற்றுச்சுவர் அமைத்தல், நடைபாதை மின் விளக்கு, அலங்கார செடிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இப்பணிகளை மேற்கொள்ள, தனியார் ஒப்பந்ததாரருக்கு 'டெண்டர்' விடப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு மே மாதம், தனியார் ஒப்பந்ததாரர் பணியை துவக்கி ஏரிக்கரையை பலப்படுத்துதல், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.

தற்போது, கரையின் மீது மின் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இப்பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடந்தது.

இதில், நகரில் நிலத்தடி நீரை அதிகரிக்க, குண்டூர் ஏரியை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று, ஏரியை துார்வாரி சீரமைக்க நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, ஏரி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.

செங்கல்பட்டு நகரின் மையப்பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ள நிலையில், சுற்றுப்புற பகுதிகளில் வீடுகள் அமைந்துள்ளன. நீராதாரமாக விளங்கும் இந்த ஏரியை சீரமைத்து துார்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். அப்போது தான், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, செங்கல்பட்டு நகரில் தண்ணீர் பிரச்னை வராது.

- கு.வாசுதேவன்,

நகர வளர்ச்சி மன்ற செயலர், செங்கல்பட்டு.

செங்கல்பட்டு குண்டூர் ஏரியில், 2.94 கோடி ரூபாயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கரை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. கரையின் மேல் பகுதியில், தற்போது மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நடை பயிற்சி செல்லும் வகையில், நடைபாதை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை ஒரு மாதத்தில் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

- நகராட்சி பொறியாளர்கள்,

செங்கல்பட்டு.






      Dinamalar
      Follow us