/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் மருத்துவமனையில் சொறிநாய் தொல்லை
/
மதுராந்தகம் மருத்துவமனையில் சொறிநாய் தொல்லை
ADDED : ஜன 19, 2024 12:56 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சொறிநாய் உலா வருவதால், நோயாளிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் நகராட்சியில் அரசு பொது மருத்துவமனை அமைந்துள்ளது. மதுராந்தகத்தை சுற்றி உள்ள அச்சிறுப்பாக்கம், ராமாபுரம், சூணாம்பேடு, ஒரத்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் நோயாளிகள், இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.
நாள்தோறும், 1,000த்துக்கும் மேற்பட்ட, புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில், தெரு நாய் பெருக்கம் அதிகரித்து உள்ளது.
இதைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்காததால், தற்போது நாய்கள் பெருக்கம் அதிகரித்து விட்டது.
இந்த நாய்கள், கூட்டம் கூட்டமாக மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரிகின்றன.
மேலும், நோய் வாய்ப்பட்ட நாய்கள் மற்றும் சொறி நாய்கள் வளாகப் பகுதியில் சுற்றி வருகின்றன. அவற்றின் மேல் ஈக்கள் மொய்க்கின்றன.
எனவே, மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரியும் நோய் வாய்ப்பட்ட நாய்களை அப்புறப்படுத்த நோயாளிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

