/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் இறைச்சி கழிவு குவிப்பு செங்கை புறநகரில் தொற்று நோய் பீதி
/
சாலையோரம் இறைச்சி கழிவு குவிப்பு செங்கை புறநகரில் தொற்று நோய் பீதி
சாலையோரம் இறைச்சி கழிவு குவிப்பு செங்கை புறநகரில் தொற்று நோய் பீதி
சாலையோரம் இறைச்சி கழிவு குவிப்பு செங்கை புறநகரில் தொற்று நோய் பீதி
ADDED : டிச 31, 2024 01:01 AM

மறைமலைநகர், செங்கல்பட்டு மாவட்ட புறநகர் பகுதிகளில், சாலையோரங்களில் அதிக அளவில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட புறநகர் பகுதிகளான மறைமலைநகர், பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், பரனுார், செங்கல்பட்டு புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை முழுதும் பல இடங்களில், சாலையில் இருபுறமும் இறைச்சி கழிவுகள் பல இடங்களில் குவியல்களாக கொட்டப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, இந்த பகுதிகளில் தினமும் செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், கடும் அவதியடைந்து வருகின்றனர். இது, பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால், சுற்று வட்டார மக்கள் பீதியில் உள்ளனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
செங்கல்பட்டு புறவழிச்சாலை மேம்பாலங்கள் கீழே, பரனுார் சுங்கச்சாவடி அருகிலுள்ள வனப்பகுதி, திருத்தேரி ஏரி, பொத்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, தொடர்ந்து இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன.
குறிப்பாக, இரவு நேரங்களில் மர்ம நபர்கள் இந்த அடாவடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கழிவுகளில் இருந்து, காற்றில் பறக்கும் கோழி இறக்கைகள், வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு தடுமாறுகின்றனர்.
இந்த குப்பையை தெரு நாய்கள் கிளறுவதால், அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நெடுஞ்சாலையில் அதிக அளவில் தெரு நாய்கள் குவிந்து அச்சம் ஏற்படுத்துகின்றன.
இறைச்சிக் கழிவு மற்றும் பல்வேறு வகையான குப்பை குவிக்கப்படுவதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சாலையில் பல இடங்களில், 'கான்கிரீட்' கழிவுகளும் கொட்டப்படுவதால், அதில் இருந்து துாசு பறந்து, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன.
எனவே, சாலையோரங்களில் இதுபோன்று இறைச்சிக் கழிவு மற்றும் குப்பை கொட்டுவோர் மீது, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.