/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அவசர சிகிச்சை பிரிவு துவக்க எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்
/
அவசர சிகிச்சை பிரிவு துவக்க எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்
அவசர சிகிச்சை பிரிவு துவக்க எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்
அவசர சிகிச்சை பிரிவு துவக்க எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்
ADDED : பிப் 17, 2024 01:46 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவ துறை சார்பில், மாவட்ட சுகாதார பேரவை கூட்டம், கலெக்டர் கூட்ட அரங்கில், கூடுதல் கலெக்டர் அனாமிகா தலைமையில், நேற்று நடந்தது.
இதில், சப்- - கலெக்டர் நாராயண சர்மா, மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பரணிதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், செங்கல்பட்டு தி-.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி பேசியதாவது:
செங்கல்பட்டு சட்டபை தொகுதியில், வண்டலுார், மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில், 60,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில், ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில், உபகரணங்கள் பழுது ஏற்பட்டால், உடனடியாக வாங்குவதற்கு நிதி கிடைப்பதில்லை. உபகரணங்கள் வாங்க, தொகுதி நிதியை ஒதுக்க முடியாத நிலை உள்ளது.
இதனால், உபகரணங்கள் பழுது ஏற்பட்டால், உடனடியாக வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி பேசியதாவது:
கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே உள்ள பகுதியில், புற்றுநோயினால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சதுரங்கப்பட்டினம், வல்லிபுரம் பகுதியில், ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும்.
சுகாதார பேரவை கூட்டம் தொடர்பாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வட்டார அளவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, மாவட்ட பேரவைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. மாவட்ட பேரவையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, மாநில பேரவைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி தி.மு.க., நகரமன்ற தலைவர் கார்த்திக் பேசியதாவது:
நந்திவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், கிராமப்புற மக்கள் அதிகமாக சிகிச்சைக்கு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலைகளில் அதிகமான விபத்துகள் நடக்கின்றன.
விபத்தில் சிக்கியவர்களை, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அல்லது தாம்பரம் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்தில், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவுகள் துவக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.