/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மீன் இறங்குதளங்களில் நவீன கட்டமைப்புகள்; மீனவர் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்பு
/
செங்கை மீன் இறங்குதளங்களில் நவீன கட்டமைப்புகள்; மீனவர் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்பு
செங்கை மீன் இறங்குதளங்களில் நவீன கட்டமைப்புகள்; மீனவர் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்பு
செங்கை மீன் இறங்குதளங்களில் நவீன கட்டமைப்புகள்; மீனவர் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்பு
ADDED : ஜன 09, 2024 07:24 AM

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில், கடலுார்குப்பம் முதல் ஆலம்பரைகுப்பம் வரை, 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.
இக்கிராம மக்கள் நாட்டு படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்தல் மற்றும் அதை சார்ந்தே தொழில் புரிந்து வருகின்றனர்.
கூவத்துார்
கூவத்துார் அடுத்த வடபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய நடுக்குப்பம் கிராமத்தில், 150 மீனவ குடும்பங்களும், தென்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுநடுகுப்பம் கிராமத்தில், 100 மீனவ குடும்பங்களும் வசித்து வருகின்றன.
கடல் அரிப்பை தடுக்க நேர்கல் அமைக்க வேண்டும் எனவும், மீன் இறங்குதளம், வலை பின்னும் கூடம், ஏலக்கூடம் அமைக்க கோரியும், அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நபார்டு ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில், பழைய நடுக்குப்பம் மற்றும் புது நடுக்குப்பம் கிராமத்தில் தனித்தனியே நேர்கல் தடுப்பு, மீன் இறங்குதளம், வலை பின்னும் கூடம், ஏலக்கூடம் மற்றும் கழிப்பறைகள் அமைக்க, கடந்தாண்டு பணிகள் துவங்கப்பட்டன.
கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கோவளம்
திருப்போரூர் அடுத்த கோவளத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, கோவளம் கிழக்கு பகுதியில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் 3 கோடி ரூபாய் மதிப்பில், வலை பின்னும் கூடம், மீன் உலர்களம், உட்புற சாலை ஆகிய திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதை காணொலி காட்சி வாயிலாக, சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவளத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, 'மிக்ஜாம்' புயல், மழையின்போது மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- நமது நிருபர் குழு -