/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தீவிரம்!: வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
/
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தீவிரம்!: வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தீவிரம்!: வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தீவிரம்!: வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : ஆக 22, 2024 12:29 AM

செங்கல்பட்டு:வடகிழக்கு பருவழைக்கு முன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாவட்டம் முழுதும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதற்குள், ஏரிகளை துார்வாருதல் மற்றும் மழைநீர் வடிகால்வாய்களை சீரமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, அனைத்து துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழைக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ள தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், கடந்த 14ம் தேதி நடந்தது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தாம்பரம் மாநகராட்சி பகுதியில், வெள்ளத்தால் அதிகம் பாதிப்படைய கூடிய பகுதிகளில், அதிகமான நிவாரண முகாம்களை ஏற்படுத்த வேண்டும்.
நிலுவையில் உள்ள வெள்ள தடுப்பு பணிகளை, பருவ மழை துவங்குவதற்குள் முடிக்க வேண்டும். உணவு, தண்ணீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நிதி ஒதுக்கீடு
பேரிடர் காலங்களில், மக்களை மீட்பதற்கு போதுமான படகுகள் இருக்க வேண்டும். மாநகராட்சி பொது நிதியிலிருந்து, படகுகள் வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள செடி, கொடிகள் மற்றும் மிதக்கும் தாவரங்களை அகற்ற, 3 கோடியே 35 லட்சம் ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போது, பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
நெடுஞ்சாலைத் துறையினர், சென்னை - மாமல்லபுரம் சாலையில் வடிகால் அமைக்கும் பணி, சிறுபாலம், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்பதற்கு, போதுமான ரப்பர் படகுகள், உயிர் காப்பு சாதனங்கள், லைப் ஜாக்கெட், சிறு படகுகள் ஆகியவற்றை போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என, தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.
தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், உள்ளாட்சி குழுவினருடன் இணைந்து செயல்பட வேண்டும். மழைக்காலங்களில் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்துவது குறித்து, பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தால், உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கோள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின் கம்பிகள் மேல் உரசும் வகையில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை அகற்றுவதற்கு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறைகளுடன் இணைந்து, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் வினியோகம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும். சேதமடைந்த கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க வேண்டும். பருவமழை துவங்குவதற்கு முன், மின் கம்பங்கள், மின் ஒயர்கள் மற்றும் மின் மாற்றிகளை ஆய்வு செய்து, சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தணிக்கை
வெள்ள நிவாரண மையங்களை, சம்பந்தப்பட்ட பொதுப்பணி, உள்ளாட்சி, பள்ளிக்கல்வி ஆகியோர், கூட்டாக புலத்தணிக்கை செய்து, கட்டடங்களில் பழுதுகள் இருந்தால், சரி செய்ய வேண்டும்.
வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வாகனங்களில் செயல்பட்டு வரும் ஒயர்லெஸ் வாக்கி டாக்கி உபகரணங்கள் உள்ளிட்டவை சரியாக செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்திட வேண்டும்.
மருந்து இருப்பு
காவல் துறையினர் வெள்ள அபாய காலம் மற்றும் பேரிடர் காலங்களில், வருவாய்த் துறை மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி மற்றும் குளங்களின் கரைகளில் உடைப்பு ஏதேனும் கண்டறியப்பட்டால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
பேரிடர் காலங்களில், அனைத்து வகையான அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை போதுமான அளவு இருப்பு உள்ளதை, சுகாதாரத் துறையினர் உறுதி செய்ய வேண்டும்.
மழைக்காலங்களில், தெருவோர உணவுக் கடைகளை அகற்ற உணவுத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. உணவு பொருட்கள், மண்ணெண்ணெய் மற்றும் சாக்குப் பைகளை அந்தந்த பகுதியில் இயங்கிவரும் நியாயவிலை, அங்காடிகளில் இருப்பு வைத்திருக்க வேண்டும். பருவமழைக்கு அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.