/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆத்துார் சுங்கச்சாவடியில் நிற்காத பேருந்துகள் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு
/
ஆத்துார் சுங்கச்சாவடியில் நிற்காத பேருந்துகள் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு
ஆத்துார் சுங்கச்சாவடியில் நிற்காத பேருந்துகள் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு
ஆத்துார் சுங்கச்சாவடியில் நிற்காத பேருந்துகள் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு
ADDED : பிப் 14, 2024 10:12 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே, மாவட்ட எல்லை முடிவில், ஆத்துார் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியை கடந்து, இரு மார்க்கத்திலும், நாள்தோறும் 6,000த்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் கடந்து செல்கின்றன.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் விழுப்புரம், திண்டிவனம் கடந்து மேல்மருவத்துார் பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தப்படுகின்றன.
அதனால், சுங்கச்சாவடியை சுற்றியுள்ள ஒரத்தி, அத்திவாக்கம், அனந்தமங்கலம், முருங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆவணிப்பூர், ஆத்துார், ஒலக்கூர் என, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதியடைகின்றனர். திண்டிவனத்தில் இருந்து மேல்மருவத்துாருக்கு, 35 கி.மீ., பயண துாரம் ஆகும். அரசு பேருந்துகளில், திண்டிவனத்திலிருந்து- மேல்மருவத்துாருக்கு, 40 ரூபாய் பயண சீட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திண்டிவனத்தில் இருந்து ஆத்துார் சுங்கச்சாவடி, 25 கி.மீ., தொலைவில் உள்ளது. இருப்பினும், ஆத்துார் சுங்கச்சாவடியில் இருந்து மேல்மருவத்துார் செல்வதற்கு, 40 ரூபாய் பயண கட்டணம் வசூல் செய்கின்றனர்.
எனவே, ஆத்துார் சுங்கச்சாவடி பகுதியில் பயணியர் நிழற்குடை அமைத்து, அரசு விரைவு பேருந்து, அதிவிரைவு பேருந்துகள் நின்று செல்லவும், பயண துாரத்திற்கு ஏற்றவாறு, பயணச் சீட்டு கட்டணங்களை வகுக்க வேண்டும் எனவும் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத அரசு பேருந்து நடத்துனர் கூறியதாவது:
திண்டிவனம், மேல்மருவத்துார் மட்டுமே, பேருந்து நிறுத்தங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆத்துார் சுங்கச்சாவடி பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாததால், அரசு பேருந்துகள் அங்கு நிற்பதில்லை.
பாஸ்ட் ட்ராக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதால், பேருந்துகள் அதிவிரைவாக சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன.
பேருந்தில் போதிய அளவு பயணியர் இல்லாத நேரங்களில், ஆத்துார் சுங்கச்சாவடி, அச்சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்களை, பேருந்தில் ஏறுவதற்கு அனுமதிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

