/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் திரியும் மாடுகளால் தொல்லை வாகன ஓட்டிகள், விவசாயிகள் அதிருப்தி
/
சாலையில் திரியும் மாடுகளால் தொல்லை வாகன ஓட்டிகள், விவசாயிகள் அதிருப்தி
சாலையில் திரியும் மாடுகளால் தொல்லை வாகன ஓட்டிகள், விவசாயிகள் அதிருப்தி
சாலையில் திரியும் மாடுகளால் தொல்லை வாகன ஓட்டிகள், விவசாயிகள் அதிருப்தி
UPDATED : செப் 25, 2025 03:29 AM
ADDED : செப் 25, 2025 01:18 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாய பயிர்கள் நாசமாவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலை நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, மாமல்லபுரம் ஆகிய நகராட்சிகள், அச்சிறுப்பாக்கம், கருங்குழி, இடைக்கழிநாடு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் 359 ஊராட்சிகள் உள்ளன.
மாவட்டத்தில் மாடுகள் வளர்ப்போர், தங்களின் மாடுகளை கட்டி வைத்து பராமரிக்காமல் தேசிய, மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் திரிய விடுகின்றனர்.
இதனால், சாலை விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதுடன், விவசாய நிலங்களில் உள்ள நெல் பயிர்களும் நாசமாகி வருகின்றன.
இதையடுத்து, மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் செங்கல்பட்டு கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பின், சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் நெல் பயிர்களை அழிக்கும் மாடுகளை பிடித்து தலா 2,000 ரூபாய் அபராதம் விதிக்கவும், கோசாலையில் மாடுகளை ஒப்படைக்கவும், 2022ல் அப்போதைய கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
உடனே, சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். அத்துடன், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியம், கொண்டமங்கலம் ஊராட்சியில், மாடுகளை ஒப்படைக்க மாவட்ட கோசாலையும் அமைக்கப்பட்டது.
மேலும், சாலையில் கேட்பாரற்று திரிந்த மாடுகள், அதிகாரிகள் குழுவால் பிடிக்கப்பட்டு, இந்த கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன.
அதன் பின், மாட்டின் உரிமையாளர்கள் அபராத தொகையை செலுத்தி, மாடுகளை மீட்டுச் சென்றனர். ஆரம்பத்தில், மாடுகளை பிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதன் பின், இப்பணியில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.
இதையடுத்து, அருண்ராஜ் கலெக்டராக இருந்த போது, விவசாயிகள் நலன்காக்கும் கூட்டத்தில், நெல் பயிர்களை மாடுகள் அழிப்பதாக, விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்தனர்.
அவரும், நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதும், மீண்டும் மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கும் பணி துவங்கினர்.
கலெக்டர் அருண்ராஜ் மாற்றம் செய்யப்பட்ட பின், மாடு பிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து, தற்போதைய கலெக்டர் சினேகாவிடமும், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து மனு அளித்து வலியுறுத்தி உள்ளனர்.
எனவே, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.