/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கருங்குழி ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
கருங்குழி ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கருங்குழி ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கருங்குழி ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : நவ 11, 2025 10:32 PM

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டு மென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், ரயில்வே 'கேட்' அடிக்கடி மூடப்படுவதால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி, பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இதையடுத்து, படாளம் -- கருங்குழி ரயில் நிலையங்களுக்கு இடையே, கிணார் -- கீழவலம் சாலை யில், ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, 32.22 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலம் கட்டுமான பணி, 2023ம் ஆண்டில் துவங்கி, மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
மதுராந்தகத்திலிருந்து கருங்குழி வழியாக திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில், தற்காலிக சாலை அமைக்கப்பட்டு, பேருந்து போக்குவரத்து தொடர்ந்தது.
இந்நிலையில், மேம்பாலம் கட்டுமானப் பணியின் ஒப்பந்த காலம் முடிவுற்று ஆறு மாதங்களுக்கு மேலாகியும், பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.
இந்நிலையில், மதுராந்தகத்தில் இருந்து கிணார் வழியாக திருக்கழுக்குன்றம் செல்லும் அரசு பேருந்து, வீராணக்குன்னம் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள், பயன்பாட்டிற்கு வராத இந்த மேம்பாலத்தில் செல்கின்றன.
அனைத்து பணிகளும் முடிவுற்று, நெடுஞ் சாலைத்துறை பொறியாளர் கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே, பொது பயன்பாட்டிற்காக மேம்பாலத்தை ஒப்படைக்க வேண்டும்.
தற்போது, ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்தினர், மேம்பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், வாகன ஓட்டிகள் மேம்பாலத்தை பயன்படுத்தி வருவது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேம்பாலத்தில் வர்ணம் பூசுதல், மின்விளக்கு கம்பங்கள் அமைத்தல், இரவில் ஒளிரும், 'ஸ்டிக்கர்' அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை நடந்து வருகின்றன. மேம்பாலத்தின் கீழே, புறவழிச் சாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
எனவே, இப்பணிகளை விரைந்து முடித்து, மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

