/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இளைஞர் விடுதியை புதுப்பிக்காமல் சுற்றுலா வளர்ச்சி கழகம் அலட்சியம்
/
இளைஞர் விடுதியை புதுப்பிக்காமல் சுற்றுலா வளர்ச்சி கழகம் அலட்சியம்
இளைஞர் விடுதியை புதுப்பிக்காமல் சுற்றுலா வளர்ச்சி கழகம் அலட்சியம்
இளைஞர் விடுதியை புதுப்பிக்காமல் சுற்றுலா வளர்ச்சி கழகம் அலட்சியம்
ADDED : நவ 11, 2025 10:33 PM

மாமல்லபுரம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், மாமல்லபுரத்தில் இயங்கிய பயணியர் விடுதியை, புதுப்பித்து நடத்த முயற்சிக்காமல் அரசு புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால பாறைச் சிற்பங்கள், இந்திய, சர்வதேச பயணியரை கவர்கின்றன. இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங், 2019ம் ஆண்டு இங்கு சந்தித்தனர்.
இதைத் தொடர்ந்து, சுற்றுலா மேம்பட்டு, பயணியர் வருகை அதிகரித்து உள்ளது.
தற்காலத்தில், சுற்றுலா பயணியர் தங்குவதற்கு, ஏராளமான தனியார் விடுதிகள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன், சில தனியார் விடுதிகளே இருந்தன.
அப்போது, பயணியர் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு வசதியாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இங்கு, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், கடற்கரை ஓய்வு விடுதியை, 1976ம் ஆண்டு அமைத்தது.
அடுத்த சில ஆண்டுகளில், கடற்கரைக் கோவில் அருகில், 'யூத் கேம்பிங் சைட்' என்ற இளைஞர் முகாம் விடுதியை அமைத்து, அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., துவக்கி வைத்தார்.
துவக்கத்தில் இவற்றை, சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாகமே நடத்தியது.
முதலில் துவக்கிய கடற்கரை விடுதி தொடர்ந்து லாபம் ஈட்டியதால், தற்போதும் சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாகமே நடத்துகிறது. ஆனால், இளைஞர் விடுதியில் தொடர்ந்து நஷ்டமே ஏற்பட்டதால், 2003ம் ஆண்டு, தனியார் நிறுவனத்திடம், 15 ஆண்டுகள் குத்தகைக்கு அளிக்கப்பட்டது.
அந்த நிறுவனம் வர்த்தக மேம்பாட்டிற்கேற்ப, இளைஞர் விடுதியை மேம்படுத்தி, அதன் பெயரிலேயே நடத்தியது.
இந்த குத்தகை ஒப்பந்தம் 2018ல் முடிந்த நிலையில், விடுதியை சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல், நீதிமன்ற உத்தரவு மூலமாக, மேலும் ஆறு மாதங்களுக்கு தனியார் நிறுவனம் குத்தகை நீட்டிப்பு பெற்றது.
நீட்டிப்பு காலம் முடிந்து, அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் இளைஞர் விடுதி ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் அந்த தனியார் நிறுவனம், விடுதியை தொடர்ந்து நடத்த முடியாதபடி, உடைத்து சேதப்படுத்தி ஒப்படைத்தது.
இதையடுத்து, சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாகமே இந்த விடுதியை நடத்த முடிவு செய்து, விடுதியின் பரப்பு, கட்டடங்கள் நிலை குறித்து ஆய்வு செய்தது. இதையடுத்து, 2 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்க முடிவெடுத்தது.
மேலும், தனியார் பங்களிப்புடன் இந்த இளைஞர் விடுதியை மேம்படுத்தி நடத்தி, லாபத்தை பகிரவும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கட்டடங்கள் இடிந்து, செடிகள் வளர்ந்து சீரழிந்து வருகிறது.
இந்த வளாகத்தில் இருந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. விஷ ஜந்துக்களின் புகலிடமாக வளாகம் மாறியுள்ளது.
'குடி'மகன்கள், சமூக விரோதிகள் உள்ளிட்டோரின் கூடாரமாக மாறி உள்ளது.
மாமல்லபுரத்தில், குறுகிய இடத்தில் இயங்கும் தனியார் விடுதிகள், அதிக கட்டணம் வசூலித்து, லாபத்தில் இயங்குகின்றன. ஆனால், தொல்லியல் சின்னமான கடற்கரைக் கோவில் அருகில் இந்த அரசு விடுதி வளாகம் அமைந்திருந்தும், இதை சீரமைக்காததால் ஏழு ஆண்டுகளாக சீரழிந்து வருகிறது.
இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி தேசிய நெடுஞ்சாலையில், புதிதாக விடுதி அமைக்க, 30 ஏக்கர் இடத்தை, வருவாய்த் துறையிடம் சுற்றுலா வளர்சிக் கழக நிர்வாகம் கேட்டுள்ளது.
நன்றாக இயங்கி சீரழிந்துள்ள இளைஞர் விடுதியை புறக்கணித்து, புது விடுதி அமைக்க வேறு இடம் தேடுவது, சுற்றுலா ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

