/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறநகரில் அதிகரித்து வரும் பேனர்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
புறநகரில் அதிகரித்து வரும் பேனர்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
புறநகரில் அதிகரித்து வரும் பேனர்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
புறநகரில் அதிகரித்து வரும் பேனர்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 29, 2024 12:46 AM

மறைமலை நகர்:செங்கை புறநகர் பகுதிகளான பொத்தேரி, காட்டாங்கொளத்துார், மறைமலை நகர், பேரமனுார், கீழக்கரணை, சிங்கபெருமாள் கோவில், பரனுார் உள்ளிட்ட பகுதிகளில், நாள்தோறும் பேனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அரசியல் கட்சி விளம்பரங்கள், திருமண நிகழ்ச்சி என, பல தரப்பட்ட நிகழ்வுகளுக்கும் நெடுஞ்சாலை ஓரங்களில் பேனர் வைப்பது அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 27ம் தேதி, துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையிலும், செங்கல்பட்டு ராட்டினங்கிணறு ரவுண்டாணா அருகிலும், ஆபத்தான நிலையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பேனர்கள் கட்டப்பட்டுள்ள கம்பி தனியாக பெயர்ந்து வரும் நிலையில் உள்ளதால், பேனர்கள் எப்போது வேண்டுமானாலும் சாலையில் முறிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், அச்சத்துடன் இந்த பகுதியை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
புறநகர் பகுதிகளில், எங்கும் பேனர்மயமாக உள்ளது. விதிகளை மீறி, நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் பேனர் வைப்போர் மீது, அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை.
குறிப்பாக, ராட்டிணங்கிணறு பகுதியில், வண்ண வண்ண பேனர்கள் வைப்பது தொடர்கதை. இதனால், வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டு உள்ளதால், பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், பேனர்கள் முறிந்து சாலை நடுவே விழும் அபாயம் உள்ளது.
இந்த வழியாகத் தான், மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள், கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர். அவர்களின் கண்களுக்கு இதுபோன்ற விதிமுறைகள் மீறிய பேனர்கள் தெரிவதில்லை.
விபத்து ஏதும் ஏற்படும் முன், அனைத்து பேனர்களையும் அகற்றவும், விதி மீறி பேனர் வைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.