/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பராமரிப்பின்றி ஸ்ரீபெரும்புதுார் சாலை விபத்து; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
பராமரிப்பின்றி ஸ்ரீபெரும்புதுார் சாலை விபத்து; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
பராமரிப்பின்றி ஸ்ரீபெரும்புதுார் சாலை விபத்து; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
பராமரிப்பின்றி ஸ்ரீபெரும்புதுார் சாலை விபத்து; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 14, 2024 06:26 AM

மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதியில், தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பேருந்துகள் இந்த வழியாக சென்று வருகின்றன.
மேலும், சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தினமும் இந்த சாலை வழியாக, சிங்கபெருமாள் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற அமைக்கப்பட்டு இருந்த வழிகளில் குப்பை மற்றும் மணல் திட்டுகள் நிரம்பியுள்ளதால், சிறு மழைக்கே தண்ணீர் சாலையில் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையில், திருக்கச்சூர், கொளத்துார், ஆப்பூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் வெளியேற அமைக்கப்பட்ட வழிகளில் மண் திட்டுக்கள் நிரம்பியுள்ளன.
சாலையில் பல இடங்களில் பிளாஸ்டிக் குப்பை, மணல் குவியல்கள் உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தடுமாறி, கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன.
கொளத்துார் குப்பை கிடங்கு அருகில், சாலை முழுதும் குப்பை நிரம்பி வழிகிறது. இந்த பகுதியில் வாகனங்களை இயக்கும் போது, வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். அதே போல, அணுகு சாலை ஓரம் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் புதர் மண்டி, பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த சாலையை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஸ்ரீபெரும்புதுார் சாலையை பராமரிப்பதில், மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். சாலை முழுதும் நுாற்றுக்கணக்கான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதோடு, மணல் திட்டுகளால் நிரம்பியுள்ளன. கடந்த ஐந்து மாதங்களில், பெண் உட்பட ஐந்து பேர், இச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
- பி.ஆனந்தன்,
டிரைவர், ஒரகடம்.