/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொடர்ந்து விபத்து நடப்பதை தடுக்க 'சிக்னல்' தேவை மாம்பாக்கம் சந்திப்பில் வாகன ஓட்டிகள் பீதி
/
தொடர்ந்து விபத்து நடப்பதை தடுக்க 'சிக்னல்' தேவை மாம்பாக்கம் சந்திப்பில் வாகன ஓட்டிகள் பீதி
தொடர்ந்து விபத்து நடப்பதை தடுக்க 'சிக்னல்' தேவை மாம்பாக்கம் சந்திப்பில் வாகன ஓட்டிகள் பீதி
தொடர்ந்து விபத்து நடப்பதை தடுக்க 'சிக்னல்' தேவை மாம்பாக்கம் சந்திப்பில் வாகன ஓட்டிகள் பீதி
ADDED : பிப் 04, 2024 01:37 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மாம்பாக்கத்தில், நான்கு முனை சந்திப்பு சாலை உள்ளது. இச்சாலையின் கிழக்கில் கேளம்பாக்கம், மேற்கில் வண்டலுார், வடக்கில் மேடவாக்கம், தெற்கில் காயார் சாலைகள் உள்ளன.
நான்கு புறத்தில் இருந்து வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுப்பதற்காக, அங்கு இரும்பு தடுப்புகளை போலீசார் அமைத்துஉள்ளனர்.
இந்த நடவடிக்கையால் கேளம்பாக்கம் மற்றும் காயார் சாலையிலிருந்து மேடவாக்கம் செல்லும் வாகனங்கள், சமத்துவபுரம் குடியிருப்பு அருகே திரும்பி, அதே இடத்திற்கு வந்து, மேடவாக்கம் சாலையில் செல்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் 3 கி.மீ., தொலைவு சுற்றி வரும் அவலநிலை உள்ளது.
அதேபோல், மேடவாக்கம் மற்றும் வண்டலுார் சாலையில் இருந்து, காயார் சாலையில் செல்லும் வாகனங்கள், சோணலுார் சந்திப்பு பகுதியில் திரும்பி வந்து செல்வதால், 4 கி.மீ., கூடுதலாகிறது. இதனால், 20 அடியில் கடக்க வேண்டிய சாலையை, 4 கி.மீ., சுற்றி கடப்பதால், கால விரயம் மற்றும் எரிபொருள் வீணாகிறது.
அதேபோல, இந்த மார்க்கத்தில் வரும் இருசக்கர வாகனம், கார், வேன் போன்ற வாகனங்கள் மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே அவ்வப்போது தடுப்பு இல்லாத நேரங்களில் திரும்பி செல்கின்றன. இதனால், அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக, நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி, லாரி சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, மாம்பாக்கத்தில் அருகருகே அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பள்ளிகளில், 4,000த்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. அரசு பள்ளி எதிரே மாணவர்கள் மட்டும் சாலையை கடக்க சிறிய இடைவெளி விட்டு, வாகனங்கள் செல்லாத வகையில் நிரந்தர தடுப்பு அமைக்க வேண்டும்.
அதேபோல, மாம்பாக்கம் நான்கு முனை சந்திப்பில் உள்ள இரும்பு தடுப்பை அகற்றிவிட்டு, கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமித்து, சிக்னலை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இங்கு அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை அகற்றி விட்டு, சிக்னலை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு, நான்கு தடத்திலிருந்து வரும் வாகனங்களை, சுழற்சி முறையில் விட வேண்டும் அல்லது நிரந்தர தீர்வாக அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.