/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் பேனர்களால்... அச்சம் 45 நாளாகியும் அகற்றாததால் வாகன ஓட்டிகள் அவதி
/
அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் பேனர்களால்... அச்சம் 45 நாளாகியும் அகற்றாததால் வாகன ஓட்டிகள் அவதி
அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் பேனர்களால்... அச்சம் 45 நாளாகியும் அகற்றாததால் வாகன ஓட்டிகள் அவதி
அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் பேனர்களால்... அச்சம் 45 நாளாகியும் அகற்றாததால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஏப் 07, 2025 11:43 PM

செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளில் ஜி.எஸ்.டி., சாலை மற்றும் உட்புற சாலையோரங்களில், கட்சி தலைவர்கள் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள், ஒரு மாதம் கடந்தும் அகற்றப்படாததால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையோரம் மற்றும் கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் வைக்கப்படுவது, தொடர்ந்து வருகிறது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் பேனர்கள் வைக்க தடை விதித்தும், அந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டு வருகின்ற.
கடந்த பிப்., 24ம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, அ.தி.மு.க.,வினர் சார்பில், ஜி.எஸ்.டி., சாலை உட்பட செங்கல்பட்டு மாவட்டம் முழுதும், 200க்கும் மேற்பட்ட 'பேனர்'கள் வைக்கப்பட்டன.
இதையடுத்து, கடந்த மார்ச் 1ம் தேதி, இப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க.,வினரும் போட்டிபோட்டு, பேனர்களை வைத்தனர்.
இதன்படி செங்கல்பட்டு மாவட்டம் முழுதும், 500க்கும் மேற்பட்ட பேனர்கள், நடைபாதை மற்றும் வாகன வழித்தடங்களை மறித்து வைக்கப்பட்டன.
பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக வைக்கப்பட்ட இந்த பேனர்கள், இதுவரை அகற்றப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள், சாலையோர கடைக்காரர்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.
ஜெயலலிதா பிறந்தநாள் முடிந்து 40 நாட்கள் கடந்து விட்டன. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முடிந்து 35 நாட்கள் முடிந்துவிட்டன. ஆனால், விளம்பர பேனர்கள் தற்போது வரை அகற்றப்படாமல் இருப்பது, அரசியல் கட்சியினரின் மக்கள் விரோத போக்கை படம்பிடித்துக் காட்டுகிறது.
இந்த பேனர்கள் அனைத்தும், 120 சதுர அடிக்கு குறையாத அளவில் வைக்கப்பட்டு உள்ளன. சவுக்கு கம்புகளால் சட்டங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றின் மீது பேனர்கள் பொருத்தப்பட்டு, சாலையில் குழி பறித்து இந்த பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
காற்று பலமாக வீசும் போது, இந்த பேனர்கள் சாலையில் சரிந்து விழும். அப்போது, வாகன ஓட்டிகள் மீது இவை விழுந்து பெரும் விபத்து, உயிர்பலி நிகழவும் வாய்ப்புள்ளது.
அரசியல் கட்சி பேனர்கள் என்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களை அகற்ற, காவல் துறையினரும் அஞ்சுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பேனர்களை அகற்ற வேண்டும்.
தவிர, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்களுக்கு நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ஆலம்பரைக்குப்பம் பகுதிக்குச் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையை கடப்பாக்கம், ஆலம்பரைக்குப்பம், புதுத்தோட்டம், கடப்பாக்கம் குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சுற்றுலாப் பயணியர், மீன் விற்பனையாளர்கள், மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் என ஏராளமானோர் இருசக்கர வாகனம், கார், பேருந்துகளில் இந்த சாலையைக் கடந்து செல்கின்றனர்.
இந்த சாலை சந்திப்பில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த மாதம் வைக்கப்பட்ட பேனர்கள், தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளன.
பலத்த காற்று வீசினால் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது சாய்ந்து விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.
மேலும், சாலை சந்திப்பில் உள்ள பேனர்கள், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் நிலையில் உள்ளதால், கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள ஓ.எம்.ஆர்., மற்றும் இ.சி.ஆர்., சாலை, கேளம்பாக்கம் - வண்டலுார் சாலைகளில் கல்வி, தொழில் நிறுவனங்கள், பல வகை குடியிருப்புகள், மருத்துவமனைகள், 'மால்'கள் அதிக அளவில் உள்ளன.
இந்த சாலை வழியே, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
திருப்போரூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம், அரசியல், திருமணம், மனை, வீடு விற்பனை உள்ளிட்ட பல்வேறு விளம்பர பதாகைகள் அதிகரித்து வருகின்றன.
இந்த விளம்பர பதாகைகள், வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதால், அதிக விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், பேனர்கள் காற்றில் சரிந்து விழும் நிலையும் உள்ளது.
சாலைகளில் பேனர் வைப்பதற்கு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் தடை உத்தரவு அமலில் உள்ளது.
ஆனாலும், இதை சம்பந்தப்பட்டவர்கள் கண்டுகொள்வதில்லை.
புறநகர் பகுதிகளான பொத்தேரி, காட்டாங்கொளத்துார், மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஜி.எஸ்.டி., சாலை, அனுமந்தபுரம் சாலை, செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, தொடர்ந்து நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலை ஓரம் உள்ள கட்டங்களின் மீது சினிமா, அரசியல் உள்ளிட்ட விளம்பர பேனர்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற பேனர்களால் உயிரிழப்புகள் ஏற்படும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம், சாலையோரம் உள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
விளம்பர 'பேனர்'களை அகற்றும்படி அதிகாரிகள் எங்களுக்கு உத்தரவிட வேண்டும். நாங்களாக அகற்றினால், எதிர்வினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
தவிர, செங்கல்பட்டு மாவட்டம் முழுதும் உள்ள பேனர்களை அகற்றும் போது, பல டன் எடையில் சவுக்கு கம்புகள் உள்ளிட்ட கழிவுகள் சேரும். அவற்றை எங்கே வைப்பது என்பது கேள்விக்குறி.
எனவே, அந்தந்த பகுதியில் பேனர்களை வைத்த கட்சி நிர்வாகிகளே அதை அகற்ற, அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் குழு -