/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
நந்திவரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
நந்திவரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
நந்திவரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : அக் 26, 2024 01:21 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் அரசு மருத்துவமனை முன், ஜி.எஸ்.டி., சாலையை ஆக்கிரமித்து, நடைபாதை கடைகள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தன.
அந்த கடைகளால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இது தொடர்பாக, அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார்கள் அளித்தனர்.
அதன்படி, சாலைகளில் வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றும்படி, நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் முன்னிலையில், அவற்றை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, கடைகளில் இருந்த பொருட்களை, நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்து, வாகனத்தில் ஏற்றினர். இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் கூறியதாவது:
மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக, ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும், நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை அகற்ற நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அகற்றும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே ஒரு முறை நடைபாதை கடைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டன.
ஆனால், மீண்டும் வியாபாரிகள் அத்துமீறி கடைகளை வைத்துள்ளனர். எனவே, கடைகளில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால், வழக்கத்தை விட அதிக வாகனங்கள் ஜி.எஸ்.டி., சாலையில் செல்லும் போது, நடைபாதை கடைகளால் நெரிசல், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதனால், நடைபாதை கடைகளை அகற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.