/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் விளம்பர பேனர்களை அகற்றுவதில்... அலட்சியம்: உபரி வருமானம் வருவதால் அரசு துறைகள் 'கப்சிப்' ; கலெக்டர் உத்தரவை மதிக்காமல் அதிகாரிகள் மெத்தனம்
/
செங்கையில் விளம்பர பேனர்களை அகற்றுவதில்... அலட்சியம்: உபரி வருமானம் வருவதால் அரசு துறைகள் 'கப்சிப்' ; கலெக்டர் உத்தரவை மதிக்காமல் அதிகாரிகள் மெத்தனம்
செங்கையில் விளம்பர பேனர்களை அகற்றுவதில்... அலட்சியம்: உபரி வருமானம் வருவதால் அரசு துறைகள் 'கப்சிப்' ; கலெக்டர் உத்தரவை மதிக்காமல் அதிகாரிகள் மெத்தனம்
செங்கையில் விளம்பர பேனர்களை அகற்றுவதில்... அலட்சியம்: உபரி வருமானம் வருவதால் அரசு துறைகள் 'கப்சிப்' ; கலெக்டர் உத்தரவை மதிக்காமல் அதிகாரிகள் மெத்தனம்
ADDED : டிச 18, 2025 05:43 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், புற்றீசலாய் முளைக்கும் ராட்சத விளம்பர பேனர்களால், தினமும் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. ஒட்டு மொத்த அரசு துறைக்கும் உபரி வருமானம் கிடைப்பதால், நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான 30 கி.மீ., ஜி.எஸ்.டி., சாலையில், ஒரு மணி நேரத்திற்கு 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்த சாலையின் இரு பக்கமும் உள்ள கட்டடங்கள் மற்றும் சாலையோரங்களில், அதிக அளவிலான பேனர் மற்றும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 300க்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
சிங்கபெருமாள் கோவில்
சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், மகேந்திரா சிட்டி, பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சி விளம்பரங்கள், திருமண வாழ்த்து, கல்வி நிறுவனங்களின் பேனர்கள் என, சாலையோரம் மற்றும் சாலையோர கட்டடங்களின் மேல் தளங்களில், பெரிய அளவில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ஜி.எஸ்.டி., சாலையோரம், தனி நபர்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து, பேனர்கள் வைத்து தனியாக வருமானம் ஈட்டி வருகின்றனர்.
திருப்போரூர்
திருப்போரூர் ஒன்றியத்தில், 50 ஊராட்சிகள் உள்ளன. இதில், ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலை, செங்கல்பட்டு சாலை, கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை என, பல்வேறு முக்கிய சாலைகள் உள்ளன.
இச்சாலைகள் வழியே தினமும், லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த நெடுஞ்சாலைகளில் அரசியல், திருமணம், மனை, வீடு விளம்பரம் என, பல்வேறு விளம்பர பதாகைகள் வைப்பது அதிகரித்து வருகிறது.
செய்யூர்
செய்யூர் அருகே கடப்பாக்கம் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரே, அரசியல் கட்சி பேனர் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இதனால், பள்ளி மாணவியர் உள்ளே சென்று வர இடையூறாக உள்ளது.
இதேபோல, இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகம் அருகே ஆலம்பரைக்குப்பம் செல்லும் சாலை, எல்லையம்மன் கோவில் சாலை சந்திப்பு, வெண்ணாங்குப்பட்டு, சரவம்பாக்கம், செய்யூர் பஜார் பகுதி உள்ளிட்ட இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறாக பல பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
மேல்மருவத்துார்
மேல்மருவத்துார் காவல் எல்லைக்கு உட்பட்ட சோத்துப்பாக்கம் பகுதி சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும், தனியார் கட்டடத்தின் மீது ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், விதிமுறைகளை மீறி உரிய அனுமதியின்றி ஆத்துார் சுங்கச்சாவடி முதல் மாமண்டூர் பாலாறு பாலம் வரை, 10க்கும் மேற்பட்ட ராட்த விளம்பர பேனர்கள், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியும், பல்வேறு கட்டடங்களின் மீதும் வைக்கப்பட்டு உள்ளன.
சோத்துப்பாக்கம், ஊனமலை, பாக்கம், ஜானகிபுரம், படாளம், புக்கத்துறை உள்ளிட்ட பகுதிகளில், துறை சார்ந்த அதிகாரிகளின் அனுமதி பெறாமலேயே, ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், பழைய பேருந்து நிலையம் முதல் கலெக்டர் அலுவலகம் வரை, தனியார் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் வணிக ரீதியான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வைக்கும் பேனர்கள் அதிகரித்து வருகின்றன.
விளம்பர பேனர்கள் வைப்பதற்கு தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளன.
இதை நடைமுறைப்படுத்த, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வணிக ரீதியான விளம்பரங்களுக்கு, உள்ளாட்சி நிர்வாகங்கள் கட்டணம் பெற்று, விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்க வேண்டும் என, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். வாகன ஓட்டிகள் கவனம் திசை மாறி, முன்னே செல்லும் வாகனங்களில் மோதுவதும், இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் சறுக்கி விழுந்து காயமடைவதும் தினமும் நடைபெற்று வருகிறது.
தவிர, பெரும் விபத்தில் சிக்கி, வாகன ஓட்டிகள் உயிரிழப்பதும் மாதந்தோறும் நடக்கிறது.
இந்த பேனர்களை அகற்ற நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், அரசியல் கட்சியினர் மீதுள்ள பயத்தால், அதிகாரிகள் பேனர்களை எடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை.
எனவே, விளம்பர பேனர்களை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

