/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழுதான 12,943 மின் மீட்டர்களை மாற்றுவதில்...அலட்சியம்!: நுகர்வோர், வாரியத்திற்கு பொருளாதார இழப்பு
/
பழுதான 12,943 மின் மீட்டர்களை மாற்றுவதில்...அலட்சியம்!: நுகர்வோர், வாரியத்திற்கு பொருளாதார இழப்பு
பழுதான 12,943 மின் மீட்டர்களை மாற்றுவதில்...அலட்சியம்!: நுகர்வோர், வாரியத்திற்கு பொருளாதார இழப்பு
பழுதான 12,943 மின் மீட்டர்களை மாற்றுவதில்...அலட்சியம்!: நுகர்வோர், வாரியத்திற்கு பொருளாதார இழப்பு
ADDED : செப் 21, 2024 01:59 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 1,471 ஒருமுனை மற்றும் 11,472 மும்முனை மின் மீட்டர்கள் குறைபாடு உள்ளவை என, அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை மாற்றித்தராமல், கடந்த ஆறு மாதங்களாக மின் வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். அதனால், சராசரி மின் கட்டணம் வசூலிக்கப்படுவதால், மின் வாரியத்திற்கு மட்டுமின்றி, நுகர்வோருக்கும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், செங்கல்பட்டு மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலக கட்டுப்பாட்டில், செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுபாக்கம், மறைமலை நகர், ஸ்ரீபெரும்புதுார், திருமழிசை ஆகிய கோட்டங்கள் உள்ளன.
இங்கு, வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிறு தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
இதில், வீடுகள் மற்றும் கடைகளுக்கு, ஒரு முறை மின் இணைப்பு, மும்முனை மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. நுகர்வோர் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மின் மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன.
வீடுகள், கடைகளில், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. அதன்பின், நுகர்வோர் மின் வாரிய அலுவலகங்களில் பணம் செலுத்தி வருவது வழக்கமாக உள்ளது.
மின் மீட்டர்களில் குறைபாடு ஏற்பட்டு, நுகர்வோர் மின்வாரிய அலுவலகத்தில் புகார் பதிவு செய்வர். பதிவு செய்தபின், ஒரே நாளில் மாற்று மீட்டர் பொருத்த வேண்டும். அலுவலகத்தில் மீட்டர் இல்லை என்றால், ஒரு வாரத்திற்குள் மாற்றித்தர வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.
மாவட்டத்தில், ஆறு கோட்டங்களில், ஒரு முனை மின் இணைப்பு மீட்டர்கள் 11,472, மும்முனை மீட்டர்கள் 1,471 என, மொத்தம் 12,943 மின் மீட்டர்கள், கடந்த ஆறு மாத காலமாக பழுதாகி குறைபாடுகளுடன் இயங்குகின்றன.
இதுதொடர்பாக, மின்வாரிய அலுவலங்களில் நுகர்வோர் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், வீடு மற்றும் கடைகளுக்கு, சரசாரியாக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதால், நுகர்வோர் மற்றும் மின் வாரியத்திற்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மின்வாரிய அலுவலகங்களுக்கு தினமும் வந்து விசாரிக்கும் நுகர்வோரிடம், மீட்டர் இன்னும் வரவில்லை என்றும், வந்த பின் மாற்றி பொருத்தப்படும் என்றும், அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
மாவட்டத்தில், கோட்டங்களில், மின் மீட்டர்கள் இருப்பு இல்லை என, நுகர்வோரிடம் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறைபாடு உள்ள மின் மீட்டர்களை மாற்றி, புதிய மின் மீட்டர் மாற்றித்தர வேண்டும் என, மின்வாரிய உயர் அதிகாரிகளிடம், நுகர்வோர் தொடர்ந்து, மனு அளித்து வருகின்றனர்.
எனவே, நுகர்வோர் நலன்கருதி, மின் மீட்டர்கள் வழங்க, கலெக்டர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில், குறைபாடு உள்ள மின் மீட்டர்கள் குறித்து, மனுக்கள் வந்துள்ளன. புதிய மின் மீட்டர்கள் இருப்பு இல்லை. சென்னை அலுவலகத்தில் இருந்து, புதிய மின் மீட்டர்கள் வழங்கிய பின், அவை நுகர்வோருக்கு வழங்கப்படும்.
- மின் வாரிய அதிகாரிகள்,
செங்கல்பட்டு மாவட்டம்.
வீடு, கடைகளில், மின் மீட்டர் குறைபாடு ஏற்பட்டுள்ளதால், மின் வாரிய அலுவலகங்களில் புகார் தெரிவித்தோம். புதிய மின் மீட்டர்கள் மாற்றாமல் காலம் கடத்தி வருகின்றனர். அதனால், மிகவும் பாதிக்கப்படுகிறோம். மின் மீட்டர் இருப்பு இல்லை என, அதிகாரிகள் கூறுகின்றனர். மின்வாரிய அமைச்சர், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.சண்முகசுந்தரம்,
மறைமலை நகர்,
செங்கல்பட்டு.