/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மக்களால் சீரமைக்கப்பட்ட நெமிலிச்சேரி ஏரி நாசம்
/
மக்களால் சீரமைக்கப்பட்ட நெமிலிச்சேரி ஏரி நாசம்
ADDED : ஜன 29, 2025 12:46 AM
குரோம்பேட்டை, குரோம்பேட்டையில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நெமிலிச்சேரி ஏரி உள்ளது. 37 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடியிருப்புகளாக மாறிவிட்டன.
நீர்நிலைகளை சீரமைக்க, தன்னார்வலர்களுக்கு அழைப்புவிடுத்து, 'தினமலர்' நாளிதழில், அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை அடிப்படையாக கொண்டு, 40 ஆண்டுகளுக்கு மேலாக, பிளாஸ்டிக் கழிவுகளால் மூடப்பட்டிருந்த இந்த ஏரியை, 2019ல் ஏரி பாதுகாப்பு குழு துார் வாரியது.
பின், பொதுப்பணித் துறை வாயிலாக டெண்டர் விடப்பட்டு, 15 முதல் 20 அடி வரை துார்வாரப்பட்டது.
2021 மற்றும் 2023ல், ஏரியில் படர்ந்திருந்த ஆகாய தாமரை அகற்றப்பட்டது. மக்களின் முயற்சியால் துார்வாரி, ஆழப்படுத்தப்பட்ட இவ்வேரியை, பொதுப்பணித்துறை பராமரிக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது.
இதனால், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், இவ்வேரியில் கலந்து, கழிவுநீர் குட்டையாக மாறிவிட்டது. மொத்தத்தில், ஏரி என்பது கழிவுநீர் தேக்கமாக மாறி, நாசமடைந்து விட்டது. இன்னும் சில ஆண்டுகளில், இவ்வேரி இருந்த இடமே தெரியாத அளவிற்கு மாயமாகி விடும்.
எனவே, பொதுப்பணி அதிகாரிகள் இணைந்து, இவ்வேரியை சுத்தப்படுத்தி, முறையாக பரா மரிக்க முன்வர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.