தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ புது 'பங்க்'! கூவத்துார் அருகில் மானிய விலை டீசல் பெறலாம்: மீனவர்களின் நேரம், பண விரயத்திற்கு விமோசனம்

புது 'பங்க்'! கூவத்துார் அருகில் மானிய விலை டீசல் பெறலாம்: மீனவர்களின் நேரம், பண விரயத்திற்கு விமோசனம்

புது 'பங்க்'! கூவத்துார் அருகில் மானிய விலை டீசல் பெறலாம்: மீனவர்களின் நேரம், பண விரயத்திற்கு விமோசனம்


UPDATED : செப் 29, 2026 10:15 PM

ADDED : செப் 29, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 10:15 PM ADDED : செப் 29, 2026 09:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மீனவர்கள், மானிய விலை டீசல் வாங்க, சென்னைக்கு அலைந்து வரும் நிலையில், மாமல்லபுரம் அருகே தென்பட்டினம் பகுதியில் புதிதாக 'பங்க்' அமைக்கும் பணியை, மீன்வள துறை தொடங்கி உள்ளது. 'இந்த பங்க் ஆறு மாதங்களுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 90 கி.மீ., அலைந்து திரிந்த மீனவர்கள் இனி 14 கி.மீ., துாரத்திலே டீசல் பெறலாம்' என, மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடி தொழிலை மேம்படுத்தவும், மீனவர்களின் வாழ்வாதாரம் பெருக்கவும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

அதன்படி, கடலுக்கு பைபர் விசைப்படகில் செலுத்தும் மோட்டார் இன்ஜினுக்கு, மீன்வளத் துறை சார்பில் மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், மீன்பிடி தொழிலை மேம்படுத்த, அடுத்தடுத்த தலைமுறையினரும் முனைப்பு காட்டி வருகின்றனர். அதனால், மானிய விலையில் வழங்கப்படும் படகு, இன்ஜின் உள்ளிட்டவற்றை பெற்று வருகின்றனர்.

இதில், செங்கல்பட்டு மாவட்ட மீனவர்கள், மானிய விலையில் விநியோகிக்கும் டீசலை பெற, சென்னை பகுதியில் இயங்கும் நீலாங்கரை பகுதி மீன்வளத் துறை 'பங்க்'கிற்கு சென்று வரும் நிலை ஏற்பட்டது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள், ஒருங்கிணைந்த ஒரே காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது, மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்டத்திற்கு தொடர்பு இல்லாத, நீலாங்கரை பகுதியில் இயங்கி வந்தது.

இதனால், மீனவர்களுக்கு மானிய விலை டீசல் வழங்கும் மீன்வளத்துறை 'பங்க்'க்கும், அங்கேயே இயங்கியது.

மாமல்லபுரம் பகுதியினர், 40 கி.மீ., கல்பாக்கம் பகுதியினர் 60 கி.மீ., இடைக்கழிநாடு பகுதியினர் 90 கி.மீ., என, டீசல் வாங்க நீண்டதுாரம் சென்று வர சிரமப்பட்டனர். இதனால் தொழில் பாதிப்பு, பணம் மற்றும் நேர விரயம் ஏற்பட்டு, மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி பகுதியில் பங்க் அமைக்க பரிசீலிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளாக இடம் ஒதுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே 2019ல் செங்கல்பட்டு மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகும், அதேநிலை நீடித்தது.

இதனால், மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் மானிய விலை டீசல் பங்க் ஆகியவற்றை செங்கல்பட்டு மாவட்ட பகுதிக்கு மாற்றக்கோரி, மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதுகுறித்து பரிசீலனை செய்த மீன்வளத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தை, மாமல்லபுரத்திற்கு கடந்த மார்ச் மாதம் மாற்றியது.

தொடர்ந்து, கூவத்துார் அடுத்த, தென்பட்டினம் பகுதியில், புதிதாக டீசல் பங்க் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து வருவாய் துறையிடம் முறையிட்டு, 50 சென்ட் நிலம் பெறப்பட்டது. அங்கு தமிழ்நாடு மாநில அபெக்ஸ் மீனவ கூட்டுறவு கூட்டமைப்பு நிர்வாகம் சார்பில், தற்போது மானிய டீசல் பங்க் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து மீன்வளத்துறையினர் கூறியதாவது:

நீலாங்கரையில் இருந்த மானிய விலை டீசல் பங்க் தற்போது சென்னை கோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. மீனவர்களின் கோரிக்கையை அடுத்து, செங்கல்பட்டு கோட்டத்திற்கு தனி பங்க் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆறு மாதங்களுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

14 கி.மீ., மட்டுமே எங்கள் பகுதியினர், 60 கி.மீ., துாரம் சென்று, நீலாங்கரையில் டீசல் வாங்கி வந்தனர். தற்போது தென்பட்டினத்தில் பங்க் அமைக்கப்படுவதால், 14 கி.மீ., துாரம் சென்றால் போதும். கால விரயம் தவிர்கப்படும்; மீனவர்களின் வாழ்வாதாரமும் உயரும். கா.ராமசாமி, உய்யாலிகுப்பம் மீனவர், வாயலுார்.


250 லிட்டர் டீசல் வினியோகம் கானத்துார் ரெட்டிகுப்பம் - ஆலம்பரைகுப்பம் இடையே, 36 மீனவ கிராமங்கள் உள்ளன. 9,000க்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 2,000க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் உள்ளன. மாதந்தோறும் படகிற்கு சராசரியாக, 200 - 250 லிட்டர் டீசல், மானியத்தில் வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல், தற்போதைய சந்தை விலையில் இருந்து, 16 ரூபாய் குறைவாக வினியோகிக்கப்படுகிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us