/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்பதி, காஞ்சிக்கு பேருந்து இல்லை கிளாம்பாக்கத்தில் பயணியர் அதிருப்தி
/
திருப்பதி, காஞ்சிக்கு பேருந்து இல்லை கிளாம்பாக்கத்தில் பயணியர் அதிருப்தி
திருப்பதி, காஞ்சிக்கு பேருந்து இல்லை கிளாம்பாக்கத்தில் பயணியர் அதிருப்தி
திருப்பதி, காஞ்சிக்கு பேருந்து இல்லை கிளாம்பாக்கத்தில் பயணியர் அதிருப்தி
ADDED : டிச 22, 2024 08:35 PM
கூடுவாஞ்சேரி:வண்டலுார் அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த பேருந்து நிலையத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து, தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்கின்றனர்.
தற்போது, இந்த பேருந்து நிலையத்திற்கு சாதாரண நாட்களில் 30,000 முதல் 50,000 பயணியர் வருகின்றனர்.
வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், லட்சத்திற்கும் அதிகமான பயணியர் வந்து, இங்கிருந்து பயணிக்கின்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் வாயிலாக, பயணியர் பயணம் மேற்கொள்கின்றனர்.
இவ்வளவு வசதிகள் நிறைந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பதி மற்றும் காஞ்சிபுரம் செல்வதற்கு, பேருந்து வசதி இல்லாததால், பயணியர் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:
பல ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பேருந்து முனையமாக செயல்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருப்பதி சென்று வர பேருந்து வசதி இல்லை. அதே போன்று காஞ்சிபுரம் செல்வதற்கும் நேரடியாக பேருந்து வசதி இல்லை.
இந்த இரண்டு ஊர்களுக்கும் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என, நீண்ட நாட்களாக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, பயணியர் வசதிக்காக, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து காஞ்சிபுரம் மற்றும் திருப்பதிக்கு நேரடி பேருந்து சேவையை தொடங்க வேண்டும். இதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.