/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம் 3வது ரயில் முனையத்தில் வசதிகள் இல்லை: பயணியர் அவதி
/
தாம்பரம் 3வது ரயில் முனையத்தில் வசதிகள் இல்லை: பயணியர் அவதி
தாம்பரம் 3வது ரயில் முனையத்தில் வசதிகள் இல்லை: பயணியர் அவதி
தாம்பரம் 3வது ரயில் முனையத்தில் வசதிகள் இல்லை: பயணியர் அவதி
ADDED : நவ 05, 2024 11:47 PM
சென்னை:தாம்பரம் மூன்றாவது ரயில் முனையத்தில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
பிற மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக்குவரத்து தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, ரயில்கள் இயங்கி வரும் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில் முனையங்களில் இடநெருக்கடி ஏற்படுகிறது. இதனால், தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
தாம்பரம், பெருங்களத்துார், வண்டலுார், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், தாம்பரம் ரயில் முனையத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இங்கு வந்து செல்லும் தினசரி பயணியரின் எண்ணிக்கை, 2.30 லட்சத்தை தாண்டியுள்ளது.
இருப்பினும், பயணியருக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் மேம்படுத்தவில்லை. மேம்பாட்டு திட்டத்திலும், அம்ரித் பாரத் திட்டத்திலும், தாம்பரம் இதுவரையில் இடம் பெறவில்லை என, பயணியர் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
தாம்பரத்தில் இருந்து வெளியூர் ரயில்கள் இயக்குவது அதிகரித்து வருகிறது. இதேபோல், 150க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மார்க்கத்தில் செல்லும் தினசரி பயணியர் எண்ணிக்கை, 2.30 லட்சத்தை தாண்டியுள்ளது.
ஆனால், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல், பயணியர் அவதிப்படுகின்றனர். நடைமேடைகளில் லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள் இல்லை. போதிய அளவில் காத்திருப்பு அறைகள், வீல் ஷேர் வசதி இல்லாமல் இருக்கின்றன.
ஒரு ஆண்டுக்கு மேலாக, இங்கு நடைமேம்பாலம் பணி கிடப்பில் இருக்கிறது. போதிய வசதிகள் இல்லாததால், மாற்றுதிறனாளிகள், முதியோர் கடும் அவதிப்படுகின்றனர். நடைமேடைகளில் ரயில் பெட்டிகளை சுட்டி காட்டும், டிஜிட்டல் பலகை இல்லாததால், பயணியர் சிரமப்படுகின்றனர்.
எனவே, பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு, அடிப்படை வசதிகளை மேம்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ''தாம்பரம் மூன்றாவது ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்காக, தனியார் மற்றும் ரயில்வே பங்களிப்போடு, 600 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை இறுதி செய்து, விரைவில் வாரியத்தின் ஒப்புதலை பெற உள்ளோம்,'' என்றனர்.