/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறநகர் பஸ் நிலைய பணிக்காக ஏரிக்கரையை உடைக்க எதிர்ப்பு
/
புறநகர் பஸ் நிலைய பணிக்காக ஏரிக்கரையை உடைக்க எதிர்ப்பு
புறநகர் பஸ் நிலைய பணிக்காக ஏரிக்கரையை உடைக்க எதிர்ப்பு
புறநகர் பஸ் நிலைய பணிக்காக ஏரிக்கரையை உடைக்க எதிர்ப்பு
ADDED : ஜன 31, 2024 10:54 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகரில், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, ராட்டினங்கிணறு வரை, தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுமட்டும் இன்றி, திருமணம் மற்றும் விழாக்காலங்களில், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
இதை தவிர்க்க, ஆலப்பாக்கம் ஊராட்சி, மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிக்கு சொந்தமான 9.95 ஏக்கர் நிலம், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம் மற்றும் போக்குவரத்து கழக பணிமனை அமைக்க, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணியை செயல்படுத்த, 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.
இதற்கிடையில், பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தின் மையப்பகுதியில், மலையடிவேண்பாக்கம் சர்வே எண் 70ல், 3 ஏக்கருக்கு மேல், பல ஆண்டுகளுக்கு முன் இருந்த குளத்தை துார்த்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதியில் உள்ள ஏரியில் தண்ணீர் உள்ளது. அதை வெளியேற்ற, பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியின் கரையை நேற்று உடைத்தனர்.
இதையறிந்த அப்பகுதிவாசிகள், ஏரிக்கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், தனியார் நிறுவன ஊழியர்கள், ஜே.சி.பி., இயந்திரத்துடன் திரும்பி சென்றனர்.
ஏரியை பாதுகாக்கவும், துார்ந்து உள்ள குளத்தை துார் வாரி சீரமைத்து, மீண்டும் மேம்படுத்தப்பட்ட குளம் அமைக்கவும், கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.