/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம் மாமல்லையில் அதிகாரிகள் அதிரடி
/
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம் மாமல்லையில் அதிகாரிகள் அதிரடி
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம் மாமல்லையில் அதிகாரிகள் அதிரடி
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம் மாமல்லையில் அதிகாரிகள் அதிரடி
ADDED : செப் 19, 2024 12:49 AM

மாமல்லபுரம்,:மாமல்லபுரத்தில், கிழக்கு ராஜ வீதி, கடற்கரை சாலை, ஐந்து ரதங்கள் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை, பகிங்ஹாம் கால்வாய்க்கரை சாலை ஆகியவை, போக்குவரத்திற்கு இன்றியமையாதவை.
அவற்றின் வழியே தான், உள்ளூர் வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மாமல்லபுரம் நகர்ப்பகுதிக்குள் செல்கின்றன. குறுகிய அகலமே கொண்ட இச்சாலைகளில், நிரந்தர கடைகள் சாலை பகுதியையும் ஆக்கிரமித்து நீண்டுள்ளன. நடைபாதை கடைகள் சாலைகளை ஆக்கிரமித்தே, வியாபாரம் நடக்கிறது.
சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து, சுற்றுலா களைகட்டும் நாட்களில், சாலை ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் எளிதில் கடக்கவோ, எதிரெதிர் திசையில் செல்லவோ இயலாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மருத்துவ அவசர தேவைக்கு, ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.
இதுகுறித்து, நம் நாளிதழில், விரிவான செய்தி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சப் - கலெக்டர் நாராயணசர்மா, மாமல்லை சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.
நேற்று முதல் வரும் 25ம் தேதி வரை, தினசரி ஒரு சாலை பகுதியை அளவிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, ஆய்வுக்கு பின் சப் - கலெக்டர் நாராயணசர்மா உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஆக்கிரமிப்புளை அகற்றும் பணி, நேற்று அதிரடியாக துவக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், சுகாதார ஆய்வாளர் ரகுபதி, வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், நெடுஞ்சாலைத் துறையினர் ஆகியோர் மேற்பார்வையில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது.
புதுச்சேரி சாலை புறவழி சந்திப்பு பகுதியில், ஆக்கிரமிப்பு சிற்றுண்டி கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவை அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மீண்டும் ஆக்கிரமித்தால், பங்க், தள்ளுவண்டிகள், உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என, எச்சரிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்த நிலையில், கோவளம் சாலை பகுதி ஆக்கிரமிப்பாளர்கள், தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்புறப்படுத்தினர்.
அடுத்தடுத்த நாட்கள், தொடர்ந்து அகற்றப்படுவதாகவும், பிரதான சாலை பகுதிகளில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பெரும் சவாலாக இருக்கும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்முறையாக, ஒரு வாரத்திற்கு திட்டமிட்டு அறிவித்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதால், மாமல்லபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.