/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மீனவ பகுதிகள் எல்லை பிரச்னை மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சு
/
மீனவ பகுதிகள் எல்லை பிரச்னை மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சு
மீனவ பகுதிகள் எல்லை பிரச்னை மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சு
மீனவ பகுதிகள் எல்லை பிரச்னை மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சு
ADDED : நவ 09, 2024 08:01 PM
புதுப்பட்டினம்:புதுப்பட்டினம் மீனவ பகுதி மற்றும் உய்யாலிகுப்பம் மீனவ பகுதி எல்லைப் பிரச்னை தொடர்பாக, இரண்டு கிராம மீனவர்களிடம், சப் - கலெக்டர் நாராயணசர்மா விசாரித்து, நில அளவீடு செய்ய அறிவுறுத்தி உள்ளார்.
கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் ஊராட்சியைச் சேர்ந்த மீனவர் பகுதியும், வாயலுார் ஊராட்சியைச் சேர்ந்த உய்யாலிகுப்பம் மீனவர் பகுதியும், அருகருகே உள்ளன.
இரண்டு பகுதிகளின் எல்லையில், புதுப்பட்டினம் ஊராட்சி தெருவில், ஒன்றியக்குழு நிதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. கிழக்கு - மேற்காக உள்ள சாலையில், வடக்கு - தெற்காக அமைந்த சாலை இணைகிறது. இதில், கான்கிரீட் சாலையை நீட்டிக்க முயற்சிக்கப்பட்டது.
வடக்கு - தெற்காக உள்ள சாலையின் குறிப்பிட்ட பகுதி, தங்கள் பகுதிக்கு உட்பட்டதாக உய்யாலிகுப்பம் மீனவர்கள் தெரிவித்து, சாலை அமைக்க கூடாது என எதிர்த்தனர். இதுதொடர்பாக, இரண்டு தரப்பினரும் போராட்டம் நடத்தி, கலெக்டர் அருண்ராஜிடம் முறையிட்டனர்.
இரண்டு பகுதி எல்லை விவகாரம் குறித்து, சப் - கலெக்டர் நாராயணசர்மா விசாரிக்க, கலெக்டர் அறிவுறுத்தியதை தொடர்ந்து, நேற்று சப் - கலெக்டர் விசாரித்தார்.
இதுகுறித்து உய்யாலிகுப்பம் மீனவர்கள் கூறியதாவது:
சர்ச்சைக்குரிய சாலையின் குறிப்பிட்ட பகுதி, எங்கள் கிராமத்தைச் சேர்ந்தது. நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன், மீன்வளத் துறையிடம் ஒப்படைத்து, மீனவர் கூட்டுறவு சங்க பெயரில் பதிவு செய்து உள்ளோம்.
அதற்கான பதிவு ஆவணங்களையும், அதிகாரிகளிடம் அளித்துள்ளோம். எதிர்தரப்பினரும், அவர்களுக்கு சொந்தமானது எனக்கூறி வாதிட்டனர். இந்த எல்லை பிரச்னையை தீர்க்க, போலீஸ் பாதுகாப்புடன் நில அளவைத் துறையினருடன் அளவிட தாசில்தாரிடம், சப் - கலெக்டர் அறிவுறுத்தினார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.