/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அப்பாடா! ரூ.90.50 கோடி மாமல்லை பஸ் நிலைய பணி விறுவிறுப்பு 32 ஆண்டு இழுபறி முடிவுக்கு வந்ததால் பிரச்னைக்கு தீர்வு
/
அப்பாடா! ரூ.90.50 கோடி மாமல்லை பஸ் நிலைய பணி விறுவிறுப்பு 32 ஆண்டு இழுபறி முடிவுக்கு வந்ததால் பிரச்னைக்கு தீர்வு
அப்பாடா! ரூ.90.50 கோடி மாமல்லை பஸ் நிலைய பணி விறுவிறுப்பு 32 ஆண்டு இழுபறி முடிவுக்கு வந்ததால் பிரச்னைக்கு தீர்வு
அப்பாடா! ரூ.90.50 கோடி மாமல்லை பஸ் நிலைய பணி விறுவிறுப்பு 32 ஆண்டு இழுபறி முடிவுக்கு வந்ததால் பிரச்னைக்கு தீர்வு
ADDED : ஜன 05, 2025 01:12 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், 90.50 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் வேகமெடுத்து உள்ளன. 32 ஆண்டுகள் இழுபறி முடிவுக்கு வந்ததால், இங்கு நிலவும் இடநெருக்கடி, போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, 25 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக, ஒப்பந்த நிறுவனத்தினர் தெரிவித்து உள்ளனர். 32 ஆண்டுகள் இழுபறி முடிவுக்கு வந்ததால், மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் நிலவும் இடநெருக்கடி, போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் முன்புறம், கோவிலுக்குச் சொந்தமான குறுகிய திறந்தவெளி பகுதியே, கடந்த 50 ஆண்டுகளாக மாமல்லபுரம் பேருந்து நிலையமாக உள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள், தனியார் பேருந்துகள் என, தினமும் நுாறுக்கும் மேற்பட்ட நடைகள், இங்கிருந்து பிற இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆனால் இந்த பேருந்து நிலையத்தில், பேருந்துகளை நிறுத்த விசாலமான இடமின்றி, கடும் இடநெருக்கடி உள்ளது.
பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர், திறந்தவெளியில் வெயில், மழையில் அவதிப்படுகின்றனர். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை.
இது ஒருபுறமிருக்க, பேருந்து நிலைய பகுதியானது கடற்கரை சாலை, தென்மாட வீதி, பழைய சிற்பக் கல்லுாரி சாலை, கிழக்கு ராஜ வீதி, பாடசாலை தெரு ஆகிய சாலைகள் இணையும் சந்திப்பாகவும் உள்ளது.
இதனால், பேருந்துகளை நிலையத்தில் நிறுத்த சாலையிலிருந்து திரும்பும் போதும், நிலையத்திலிருந்து வெளியேறும் போதும், பிற சாலைகளில் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல், நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து முடங்குகிறது.
இதை கருதி தமிழக அரசு, கடந்த 32 ஆண்டுகளுக்கு முன், வருங்கால சுற்றுலா மேம்பாடு கருதி, மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, கடந்த 1992ல் முடிவெடுத்தது.
அதன் பின் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் திட்டத்தை செயல்படுத்த அறிவித்தது.
இதையடுத்து, திருக்கழுக்குன்றம் சாலை பகுதியில், பகிங்ஹாம் கால்வாய் அருகில் உள்ள, 6.80 ஏக்கர் இடத்தை வருவாய்த்துறை ஒதுக்கி, நீண்ட கால இழுபறிக்குப் பிறகு, மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் ஒப்படைத்தது.
ஆனால், பேருந்து நிலையம் இடம் மாறினால் வர்த்தகம், தொழில் பாதிக்கப்படலாம் எனக் கருதிய சில அரசியல் பிரமுகர்களின் முட்டுக்கட்டையால், இத்திட்டமே முடங்கியது.
இதற்கிடையே, மத்திய பொதுப்பணித்துறை வாயிலாக இத்திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்த குழுமம், அத்துறையுடன் கடந்த 2016ல் ஒப்பந்தம் மேற்கொண்டது.
மத்திய பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்து, 15 கோடி ரூபாய் மதிப்பில் பேருந்து நிலைய திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்தனர்.
ஆனால், நகர்ப்புற வளர்ச்சித் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள், 26 கோடி ரூபாய் மதிப்பிற்கேற்ப திட்டத்தை மாற்றும்படி வலியுறுத்தியதாக சர்ச்சை ஏற்பட்டது.
பின்னர், மதிப்பீடை 18 கோடி ரூபாய்க்கு குறைத்து, கடந்த 2019ல் தனியார் நிறுவனத்திடம் கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
அந்நிறுவனம் மண்ணின் தன்மையை பரிசோதித்தும், கட்டுமானப் பணிகளை துவக்கவில்லை. மத்திய பொதுப்பணித் துறையும் திட்டத்தை கைவிட்டது.
இந்நிலையில், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம், சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துடன், நான்கு ஆண்டுகளுக்கு முன் இணைக்கப்பட்டது.
இதையடுத்து, சி.எம்.டி.ஏ., நிர்வாகம், மாமல்லபுரம் பேருந்து நிலைய திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்தது.
பொது மற்றும் தனியார் கூட்டு பங்களிப்பில், 50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்துவதாக, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன் பின் மதிப்பீடு, 67 கோடி ரூபாய்க்கு உயர்த்தப்பட்டது. கடந்தாண்டு, திட்ட மதிப்பு 90.50 கோடி ரூபாயாக இறுதி செய்யப்பட்டது.
கடந்தாண்டு லோக்சபா தேர்தலுக்கு முன், கட்டுமானப் பணிகளை துவக்க கருதி, கடந்தாண்டு பிப்., 27ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து, தேர்தல் முடிந்த பிறகு, கடந்த ஜூலையில், மாமல்லபுரம் பேருந்து நிலைய பணிகள் துவக்கப்பட்டன.
இந்த புதிய பேருந்து நிலையம், பகிங்ஹாம் கால்வாய் வெள்ளம் புகாத வகையில் பாதுகாப்பு சுவருடன், இரண்டு தளங்களில் அமைகிறது.
கீழ்தளத்தில் கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைகிறது.
மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை மட்டத்திற்கேற்ப அமையும் மேல்தளம், ஒரே நேரத்தில் 50 பேருந்துகள் நிறுத்தும் வசதி, பயணியர் தங்குமிடம், உணவகம், பிற கடைகள் ஆகியவற்றுடன், இவ்வூர் பாரம்பரிய தன்மைக்கேற்ற கலையம்சத்துடன் அமைகிறது.
தற்போது, கீழ்தள பகுதி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நிலத்தடியில் 'பைல்' எனும் அடித்தளம் அமைத்து, கான்கிரீட் துாண்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சமீபத்தில் இப்பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், இங்கு சுற்றுலா பயணியர் வருகின்றனர். இந்த ஊரின் சிறப்பிற்கு ஏற்றபடி, நிரந்தர பேருந்து நிலையம் நீண்ட காலமாக இல்லை. பயணியருக்கு வசதிகள் இல்லை. இப்போதைய பேருந்து நிலைய இடம் மிகவும் சிறிய இடம்.
பேருந்துகள் திரும்பும் போது, வேறு வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்போது புதிய பேருந்து நிலையம் கட்டப்படுவதால், இந்த பிரச்னைகளுக்கு விமோசனம் கிடைக்கும். நீண்டதுார பேருந்துகள் இந்த நிலையத்திற்குள் வந்து செல்லும் போது, பயணியர் பயன் பெறுவர்.
- ஆர்.மோகனகிருஷ்ணன்,
சுற்றுலா ஆர்வலர், மாமல்லபுரம்.