/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்கூட்டர்களை குறி வைத்து திருடிய முதியவர் கைது
/
ஸ்கூட்டர்களை குறி வைத்து திருடிய முதியவர் கைது
ADDED : நவ 04, 2024 02:49 AM
மறைமலை நகர்:மறைமலை நகர் போலீசார், நேற்று முன்தினம் இரவு காட்டாங்கொளத்துார் ரயில் நிலையம் அருகில், வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக டி.வி.எஸ்., ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர், போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றார்.
அந்த நபரை மடக்கி பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்ட நபர் சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ஹரிஹரன், 61, என்பதும், ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தை சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலைய 'பார்கிங்' பகுதியில் திருடியதும் தெரிய வந்தது.
ஹரிஹரன் மீது, தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில், 15க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
மேலும், ஹரிஹரனுக்கு கியர் உள்ள இருசக்கர வாகனங்களை ஓட்டத்தெரியாததால், கியர் இல்லாத ஸ்கூட்டி, ஆக்டிவா போன்ற வாகனங்களை குறி வைத்து திருடி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, விசாரணைக்கு பின் ஹரிஹரனை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.