/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசை
/
செங்கை மாவட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசை
செங்கை மாவட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசை
செங்கை மாவட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசை
ADDED : டிச 31, 2025 05:56 AM

- நமது நிருபர் குழு -: செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா, விமரிசையாக நடந்தது.
சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 4:15 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மூலவர், பூ அங்கி சேவையில் எழுந்தருளினார்.
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரகலாத வரதர் ரத்னங்கி சேவையில், சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்போரூர் கிரிவலப் பாதையில், ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், கொளத்துார் கல்யாண ரங்கநாதர் கோவில், திருப்போரூர் பஜார் வீதி வெங்கடேச பெருமாள் கோவில், நெல்லிக்குப்பம் அம்புஜ வள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில், அகரம் பாமா - ருக்மணி சமேத கோபாலகிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று, சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடந்தது. மேற்கண்ட கோவில்களில் மலர் அலங்காரத்துடன், சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மலர் அர்ச்சனைகள் நடைபெற்றன.
இதில், ஏராளமான பக்தர்கள் குவிந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவர் ஸ்தலசயன பெருமாளுக்கு கார்த்திகை தீபத்தன்று சாற்றப்பட்ட தைலகாப்பை அகற்றி, மார்கழி வழிபாடு நடந்தது.
அதை த்தொடர்ந்து, கண்ணாடி அறை அருகில் உற்சவர் உலகுய்யநின்ற நாயனார், தேவியருடன் எழுந்தருளினார். சிறப்பு வழிபாட்டிற்குப் பின், 5:15 மணிக்கு, தற்காலிக சொர்க்கவாசலை கடந்து, வீதியுலா சென்றார்.
திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், மூலவர் ஆதிவராக பெருமாளிற்கு, கார்த்திகை தீபத்தன்று சாற்றப்பட்ட தைலகாப்பை அகற்றி, மார்கழி வழிபாடு நடந்தது.
உற்சவர் ரங்கநாதர், தேவியருடன் எழுந்தருளி, 6:00 மணிக்கு, சொர்க்கவாசல் கடந்து, வீதியுலா சென்றார்.
கல்பாக்கம், வெங்கடேச பெருமாள், வெங்கடகிருஷ்ண பெருமாள், சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள், மெய்யூர் ஆதிகேசவ பெருமாள், வெங்கப்பாக்கம் ரங்கநாத பெருமாள், புலிகுன்றம் லட்சுமிநாராயண பெருமாள் உள்ளிட்ட கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் உத்சவம் நடைபெற்றது.

