/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊராட்சிகளில் பூட்டப்பட்ட நுாலகங்களை திறப்பது...எப்போது?: சீரமைத்து பயன்பாட்டுக்கு திறக்க வலியுறுத்தல்
/
ஊராட்சிகளில் பூட்டப்பட்ட நுாலகங்களை திறப்பது...எப்போது?: சீரமைத்து பயன்பாட்டுக்கு திறக்க வலியுறுத்தல்
ஊராட்சிகளில் பூட்டப்பட்ட நுாலகங்களை திறப்பது...எப்போது?: சீரமைத்து பயன்பாட்டுக்கு திறக்க வலியுறுத்தல்
ஊராட்சிகளில் பூட்டப்பட்ட நுாலகங்களை திறப்பது...எப்போது?: சீரமைத்து பயன்பாட்டுக்கு திறக்க வலியுறுத்தல்
ADDED : மே 06, 2025 10:20 PM

மறைமலைநகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், ஊராட்சிக்கு ஒன்று என அமைக்கப்பட்ட நுாலகங்கள், பராமரிப்பின்றி பூட்டிக் கிடக்கின்றன. இவற்றை சீரமைத்து பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்துார், அச்சிறுபாக்கம், திருக்கக்ழுகுன்றம், மதுராந்தகம், திருப்போரூர், புனித தோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 359 ஊராட்சிகளில், 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில், 2010ம் ஆண்டு, அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், ஊராட்சிக்கு ஒரு நுாலகம் அமைக்கப்பட்டது.
கிராமப்புற மக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியரிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க இலக்கியம், வரலாறு, சமயம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள், நாளிதழ்கள் உள்ளிட்டவை இந்த நுாலகங்களில் இடம்பெற்று இருந்தன.
துவங்கப்பட்ட சில ஆண்டுகள், இந்த நுாலகங்கள் முறையாக இயங்கி வந்த நிலையில், தற்போது பல கிராமங்களில், நுாலகங்கள் பூட்டியே உள்ளன.
இதனால், நுாலகங்களில் உள்ள புத்தகங்கள் வீணாகி வருகின்றன. பல ஊராட்சிகளில் உள்ள நுாலக கட்டடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கு தற்போது, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் நுாலகங்களை சீரமைத்து திறந்தால் பொதுமக்கள், மாணவர்களின் வாசிப்பு திறன் அதிகரிக்கும். எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுபோன்று மூடப்பட்டுள்ள நுாலகங்களை சீரமைத்து, பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருநது கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கிராமப்புற குழந்தைகளிடையே வாசிக்கும் திறனை அதிகரிக்கும் நோக்கில், நுாலகங்கள் துவக்கப்பட்டன. ஆனால், இவற்றை பராமரிக்க நிரந்தர பணியாளர்கள் இல்லாததால், நுாலகங்கள் பூட்டியே உள்ளன.
பல ஊராட்சிகளில் நிதி பற்றாக்குறை உள்ளதால், நுாலகத்திற்கு ஆட்களை நியமித்தால், யார் ஊதியம் வழங்குவது போன்ற காரணங்களால், நுாலகங்கள் செயல்படாமல் உள்ளன.
கடந்த 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பல்வேறு ஊராட்சிகளில், 50,000 ரூபாய் மதிப்பீட்டில் நுாலக கட்டடங்கள் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றும், பூட்டி வைக்கப்பட்டு உள்ளன.
தற்போது கோடை விடுமுறை துவங்கி உள்ளதால் குழந்தைகள் தொலைக்காட்சி, மொபைல் போன்களில் மூழ்கி கிடக்கின்றனர்.
இவர்களின் கவனத்தை திசை திருப்ப, தங்கள் பகுதிகளில் உள்ள நுாலகங்களை முறையாக திறந்து வைத்தால், அவர்களின் கவனம் வாசிப்பின் மீது திரும்பும்.
எனவே, மாவட்ட நிர்வாகம் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள நுாலகங்களை சீரமைத்து, முறையாக காலை 10:00 மணி முதல் மாலை வரை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அலைச்சல்
மறைமலை நகர் நகராட்சி ரயில் நகர் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கிளை நுாலகம் பூட்டியே உள்ளதால், அந்த பகுதியில் போட்டித் தேர்வு எழுதுவோர், கல்லுாரி மாணவ -- மாணவியர் குறிப்புகள் எடுக்க, 3 கி.மீ., துாரம் உள்ள மற்றொரு நுாலகத்திற்கோ அல்லது செங்கல்பட்டு மாவட்ட நுாலகத்திற்கோ செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
- வாசகர்கள்