விடியல் மக்களுக்கல்ல ஸ்டாலின் குடும்பத்துக்கே: தமிழக பா.ஜ., தாக்கு
விடியல் மக்களுக்கல்ல ஸ்டாலின் குடும்பத்துக்கே: தமிழக பா.ஜ., தாக்கு
ADDED : டிச 29, 2025 10:29 PM

போத்தனூர் : ''தி.மு.க.ஆட்சியில் விடியல் என்பது மக்களுக்கு அல்ல. முதல்வரின் குடும்பத்திற்குத் தான்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
கோவை மலுமிச்சம்பட்டியில் தெற்கு மாவட்ட பா.ஜ. சார்பில், மாவட்ட மாநாடு நடந்தது.
அதில் பங்கேற்று நயினார் நாகேந்திரன் பேசியதாவது:பிரதமர் மோடி காசி சங்கமத்தில் பேசும்போது, உத்தரபிரதேச மாநிலத்தில், பள்ளிகளில் தமிழை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். அதன்படி, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக முதல்வர், 'தமிழ், தமிழ்' என கூறி தமிழை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்டாலினின் ஒரே நோக்கம், தன்னுடைய மகனை முதல்வராக்க வேண்டும் என்பதே. இதற்காக, காங்., கூட்டணியை இறுக்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்.
விரைவில் நானும், அண்ணாமலையும் அரசியல் ஆட்டம் ஆட போகிறோம்.அது மோடியும், அமித் ஷாவும் எதற்காக இந்த கூட்டணியை அமைத்தார்களோ, அதை நிறைவேற்றவே ஆட்டம் ஆடப் போகிறோம். தமிழகத்திற்கு மத்திய அரசு என்ன செய்தது என கேட்கிறார்கள். 14 லட்சம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில், நடுநிலையோடு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை நிறைவேற்றி இருந்தால், எந்த பிரசனையும் இருந்திருக்காது. நிறைவேற்றாதாலேயே ஒரு உயிர் போனது. இனி வரும் பவுர்ணமி நாட்களிலும், திருப்பரங்குன்றத்தில் மிகச் சிறப்பாக கிரிவலம் நடத்தப்படும்.
தமிழகத்தில் யாருக்கும் விடிவில்லை; முதல்வர் குடும்பத்துக்கு மட்டும் தான் விடிவு. தமிழகத்தில், 17 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது; யாரும் தப்பிக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

