sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பல துறையுடன் இணைந்து பயணியர் கட்டமைப்பு வசதி மாமல்லபுரத்திற்கு வளர்ச்சி ஆணையம் அமைத்து உத்தரவு

/

பல துறையுடன் இணைந்து பயணியர் கட்டமைப்பு வசதி மாமல்லபுரத்திற்கு வளர்ச்சி ஆணையம் அமைத்து உத்தரவு

பல துறையுடன் இணைந்து பயணியர் கட்டமைப்பு வசதி மாமல்லபுரத்திற்கு வளர்ச்சி ஆணையம் அமைத்து உத்தரவு

பல துறையுடன் இணைந்து பயணியர் கட்டமைப்பு வசதி மாமல்லபுரத்திற்கு வளர்ச்சி ஆணையம் அமைத்து உத்தரவு


ADDED : மார் 21, 2025 11:42 PM

Google News

ADDED : மார் 21, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரத்தில், பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்த திட்டமிடப்படும் பயணியர் வசதிகள் கட்டமைப்பு பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த, வளர்ச்சி ஆணையம் ஏற்படுத்தப்படுவதாக, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

மாமல்லபுரம், மார்ச் 22-

மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய சிற்பக்கலைகள் சுற்றுலா இடமாக விளங்குகிறது. பல்லவர்கள் இப்பகுதி பாறைக் குன்றுகளில், கலையம்ச சிற்பங்களை வடித்துள்ளனர். உள்நாடு, சர்வதேச பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.

சென்னை பகுதியினருக்கு, அருகிலுள்ள பொழுதுபோக்கு இடமாக மாமல்லபுரம் உள்ளதால் வார இறுதி, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில் திரள்கின்றனர்.

தற்கால சுற்றுலா மேம்பட்டு வருவதாலும், பயணியர் தொடர்ந்து அதிகரிப்பதாலும், சர்வதேச தரத்தில் பயணியர் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

ஆனால், அரசு துறைகளின் நிர்வாக குளறுபடி, வெவ்வேறு துறைகளுக்கு உட்பட்ட இடத்தை பெறுவது, திட்டத்தை செயல்படுத்த அனுமதி கிடைக்காதது போன்ற சிக்கல்களால், குறிப்பிட்ட அந்த திட்டமே முடங்குகிறது.

பாரம்பரிய சிற்பங்களை தொல்லியல் துறை பராமரிக்கும் நிலையில், சிற்ப வளாகத்திலிருந்து, 325 அடி சுற்றளவு பகுதிக்குள், கட்டுமானங்கள் கட்ட தடை உள்ளது.

அதற்கு அப்பாற்பட்ட தொலைவில் புதிய கட்டடங்கள் கட்ட, தொல்லியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இடம்பெற்றுள்ள அங்கீகார குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.

அரசுத்துறை திட்டங்களுக்கு, இந்த அங்கீகார குழு அனுமதி அல்லது பிற துறைகளின் அனுமதி பெற இயலாத சிக்கலால், திட்டங்கள் முடங்குகின்றன.

சிற்ப பகுதிகளில், பயணியருக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மத்திய சுற்றுலாத் துறையிடம், இதுகுறித்து தமிழக சுற்றுலாத்துறை பரிந்துரைத்தது. இதையடுத்து மத்திய அரசு, 'சுவதேஷ் தர்ஷன்' திட்டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த முடிவெடுத்து, முதல் தவணையாக 6.66 கோடி ரூபாயை, கடந்த 2018ல் வழங்கியது.

சுத்திகரிப்பு குடிநீர், கடற்கரை நடைபாதை, முதலுதவி சிகிச்சை மையம், கலையரங்கம் உள்ளிட்டவற்றை, முந்தைய பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக மேற்கொள்ள முயன்று, குளறுபடிகளால் முடங்கியது.

மத்திய, மாநில அரசுகளின் துறைகள் இடத்தில் மேம்பாடு என்பதால், சம்பந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு முக்கியம்.

கடற்ரை கோவில் அருகில், உள்ளாட்சி பொது திறவிட பகுதி, 3.95 ஏக்கர் உள்ளது. இதை தொல்லியல் துறை பயன்பாட்டிற்கு ஒப்படைக்குமாறு அத்துறை வலியுறுத்தியும், உள்ளாட்சி நிர்வாகம் மறுத்தது.

தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும இடமும் இங்கு உண்டு. அப்பகுதி பராமரிப்பு பொறுப்பு, தொல்லியல் துறையிடமே ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

சுவதேஷ் தர்ஷன் திட்டம், இடம் ஒப்படைப்பு மறுப்பு, தொல்லியல் துறை அனுமதி பெறுவது உள்ளிட்ட சிக்கல்களால் முடங்கியது.

இதற்கிடையே, மத்திய அரசு, மாமல்லபுரத்தை 'ஐகானிக் சிட்டி'யாக அறிவித்து, கடற்கரை கோவில் பகுதியை சர்வதேச தரத்தில் மேம்படுத்த திட்டமிட்டு, இத்திட்டமும் கேள்விக்குறியானது.

அதே கடற்கரை கோவில் பகுதியில், 30 கோடி ரூபாய் மதிப்பில், பயணியர் வசதிகளை மேம்படுத்த, 'சுவதேஷ் தர்ஷன் 2.0' திட்டத்தை, பிரதமர் மோடி கடந்தாண்டு மார்ச் 7ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கினார்.

இத்திட்டமும் தொல்லியல் துறை, நகராட்சி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றுக்கு சொந்தமான பகுதிகளில் தான் அமைகிறது.

தொல்லியல் துறை உள்ளிட்ட துறைகளின் அனுமதி பெறுவது, துறைகளிடம் இடத்தை பெறுவது உள்ளிட்ட நிர்வாக சிக்கல்களால், ஓராண்டு கடந்தும், இந்த திட்டப் பணிகள் துவக்கப்படவில்லை.

பயணியர் திரளும் சுற்றுலா பகுதியில், சுற்றுலா மேம்பாட்டு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது அவசியம்.

ஆனால், மாமல்லபுரத்தை பொறுத்தவரை, பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது. இச்சூழலில், பல துறைகளின் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக அரசு சார்பில், இங்குள்ள பல துறைகளை ஒருங்கிணைத்து, தனி 'வளர்ச்சி ஆணையம்' ஏற்படுத்த முடிவெடுத்து, தற்போதைய சட்டசபை கூட்டத்தில் அறிவித்துள்ளது.

மாமல்லபுரம், பழனி, திருச்செந்துார், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், நாகூர், வேளாங்கண்ணி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில், பல துறைகளின் சார்பில், 300 கோடி ரூபாய் மதிப்பில், பயணியர் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தகைய பகுதிகளிலும், வளர்ச்சி ஆணையம் ஏற்படுத்துவதாக தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us