/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிற்றுந்துகளை இயக்க உரிமையாளர்கள்...தயக்கம்:வழித்தட தேர்வில் குளறுபடி என புகார்
/
சிற்றுந்துகளை இயக்க உரிமையாளர்கள்...தயக்கம்:வழித்தட தேர்வில் குளறுபடி என புகார்
சிற்றுந்துகளை இயக்க உரிமையாளர்கள்...தயக்கம்:வழித்தட தேர்வில் குளறுபடி என புகார்
சிற்றுந்துகளை இயக்க உரிமையாளர்கள்...தயக்கம்:வழித்தட தேர்வில் குளறுபடி என புகார்
ADDED : ஜூன் 22, 2025 02:00 AM

சென்னை:சென்னையில், 72 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டும், 11 வழித்தடங்களில் மட்டுமே சேவை துவங்கியுள்ளது. வழித்தடங்கள் தேர்வு குளறுபடியால், சிற்றுந்துகளை இயக்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழித்தடங்களில் தேவைக்கேற்ப மாற்றம் செய்ய, சிற்றுந்து உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் பொது போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தனியார் வாயிலாக சிற்றுந்துகள் இயக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு, இந்தாண்டு ஜனவரியில் ஒப்புதல் அளித்தது.
முதற்கட்டமாக, மாநிலம் முழுதும் 3,000க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு, 2,000 சிற்றுந்துகளின் சேவை, கடந்த 16ம் தேதி துவங்கப்பட்டது.
சென்னையில், 72 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், 11 சிற்றுந்து சேவைகள் மட்டுமே துவங்கியுள்ளது.
ஆதம்பாக்கம் ரயில் நிலையம் - ஈச்சங்காடு சந்திப்பு, கைவேலி பாலம் - மடிப்பாக்கம் கூட்டு ரோடு, ஈச்சங்காடு - மடிப்பாக்கம் பஸ் நிறுத்தம், போரூர் செட்டியார் அகரம் - ஆழ்வார்திருநகர் ஆவின் விற்பனையகம், ராமாபுரம் டி.எல்.எப்., - போரூர் டோல்கேட்.
வளசரவாக்கம் லாமெக் பள்ளி - மீனாட்சி பொதுமருத்துவமனை போரூர், நொளம்பூர் - பருத்திப்பட்டு செக்போஸ்ட், காரப்பாக்கம் - துரைப்பாக்கம் 200 அடி சாலை, கோவிலம்பாக்கம் - காமாட்சி மருத்துவமனை. அம்பத்துார் டன்லப் பஸ் நிறுத்தம் - பம்மதுகுளம் பஸ் நிறுத்தம்,சோழிங்கநல்லுார் - துரைப்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் மட்டுமே, சிற்றுந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.
பயணியர் தேவை அதிகமாக உள்ள சென்னை, புறநகர் பகுதிகளில் குறைந்தளவில் சிற்றுந்து சேவை துவங்கி இருப்பது, பயணியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிற்றுந்து உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:
சிற்றுந்துகள் திட்டத்தின்படி, மாவட்டங்களில் 25 கி.மீ., வரை சிற்றுந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், சென்னை புறநகரில் அதிகபட்சமாக, 10 கி.மீ., வரை மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், புதிய வழித்தடங்கள் தேர்வில் குளறுபடி நீடிக்கிறது. இதில், மாற்றம் செய்ய எங்களிடம் வழித்தட விபரங்களை பெற்று, ஆலோசனை நடத்த வேண்டும்.
சிற்றுந்து சென்றடையும் இடத்தில் இருந்து அடுத்த, 1 கி.மீ., துாரத்திற்குள் பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனை, கோவில்கள், சந்தைகள் இருந்தால், சிற்றுந்துகளை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும்.
இது போன்ற மாற்றங்கள் செய்தால் தான் சென்னை, புறநகர் பகுதிகளில் தனியார் சிற்றுந்துகளை இயக்க முடியும்.
டீசல் விலை, உதிரி பொருட்கள் விலை உயர்வால், நாங்கள் ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் மினி பஸ்களை இயக்கி வருகிறோம்.
புதிய விதிமுறையில் கூடுதல் கி.மீ., அனுமதி மற்றும் கட்டண மாற்றமும் இருக்கும் என எதிர்பார்த்தோம்.
அது தற்போது இல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
100 சிற்றுந்துகள்
இதுகுறித்து, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் பல்வேறு மண்டலங்களில், 72 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது, 11 சிற்றுந்துகள் துவங்கிய நிலையில், 100க்கும் மேற்பட்ட சிற்றுந்துகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம்.
வழித்தடம் தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை. சிற்றுந்து உரிமையாளர்கள் மனு அளித்தால், வழித்தடங்களில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூடுதல் சிற்றுந்துகள் அவசியம்
சென்னை, புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப, பொது போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை. தனியார் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பால், முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. தனியார் சிற்றுந்து சேவை வரவேற்கத்தக்கது. ஆனால், மிக குறைவாக சேவை துவங்கி இருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது. முக்கிய பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், சிற்றுந்துகளை இயக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, தனியார் சிற்றுந்து உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி, கூடுதல் சிற்றுந்து சேவைகளை துவங்க வேண்டும்.
- பால் பர்ணபாஸ்,
மாநில தலைவர், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரவை