/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
படாளம் சர்க்கரை ஆலையிலுள்ள நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு அனுப்பும் பணி துவக்கம்
/
படாளம் சர்க்கரை ஆலையிலுள்ள நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு அனுப்பும் பணி துவக்கம்
படாளம் சர்க்கரை ஆலையிலுள்ள நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு அனுப்பும் பணி துவக்கம்
படாளம் சர்க்கரை ஆலையிலுள்ள நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு அனுப்பும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 23, 2025 01:34 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த படாளம் சர்க்கரை ஆலையில் உள்ள கிடங்குகளில், பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகளை, அரவை ஆலைகளுக்கு அனுப்பும் பணி துவங்கி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன.
இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
65,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், சம்பா பருவத்தில் நெல் நடவு செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் நடந்தன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் மத்திய அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக, சம்பா பருவத்திற்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டன.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், சிலாவட்டத்தில் உள்ள, 15,000 டன் கொள்ளளவு கொண்ட நவீன நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனால், கிடங்குகள் முழுதும் நிரம்பின.
இதையடுத்து, அண்டவாக்கம் மற்றும் சிலாவட்டத்தில் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டு, நெல் மூட்டைகள் தார்ப்பாய்களால் மூடி பாதுகாக்கப்பட்டு வந்தன.
அத்துடன், மதுராந்தகம் அடுத்த படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இந்த ஆண்டுக்கான அரவை பணி முடிந்ததால், மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதை தவிர்க்க,இங்குள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டன.
அதன்படி திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம் வட்டாரங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், சர்க்கரை ஆலையில் உள்ள கிடங்குகளில் 8,000 டன் வரை அடுக்கி பாதுகாக்கப்பட்டது.
இந்நிலையில், நெல் கொள்முதல் செய்யும் பணிகள் முடிந்ததால், தற்போது கிடங்குகளில் இருந்து நெல் அரவை ஆலைகளுக்கு, இந்த நெல் மூட்டைகளை அனுப்பும் பணிகள் துவங்கி உள்ளன.