/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பல்லாவரம் பாதாள சாக்கடை பிரச்னை ரூ.86 கோடியில் குழாய்களை மாற்ற திட்டம்
/
பல்லாவரம் பாதாள சாக்கடை பிரச்னை ரூ.86 கோடியில் குழாய்களை மாற்ற திட்டம்
பல்லாவரம் பாதாள சாக்கடை பிரச்னை ரூ.86 கோடியில் குழாய்களை மாற்ற திட்டம்
பல்லாவரம் பாதாள சாக்கடை பிரச்னை ரூ.86 கோடியில் குழாய்களை மாற்ற திட்டம்
ADDED : மார் 02, 2024 11:02 PM
பல்லாவரம்,:பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டத்தில் நிலவும் பிரச்னைக்கு தீர்வாக, 86 கோடி ரூபாய் செலவில், குழாய்களை மாற்றியமைக்க மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பல்லாவரம், நகராட்சியாக இருந்த போது, 2005ல் 75.33 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. பணிகள் 2012ல் முடிந்தது. மொத்தம் 159.74 கி.மீ., நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் புதைக்கப்பட்டன.
அப்போது, 27,243 வீட்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டன. இத்திட்டத்தில், ஐந்து இடங்களில், சிறிய உந்து நிலையங்களும், கீழ்க்கட்டளை ஏரி கரையை ஒட்டி, பம்பிங் ஸ்டேஷனும் அமைக்கப்பட்டன.
குரோம்பேட்டை, பல்லாவரம் தெருக்களுக்குள் சோனா பைப்பும், கிராவட்டி மற்றும் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக பம்பிங் ஸ்டேஷனுக்கு ஆர்.சி.சி., பைப்பும் புதைக்கப்பட்டன. அதன்பின், விடுபட்ட பகுதிகளில், 24.06 கோடி ரூபாய் செலவில், 41 கி.மீ., நீளத்திற்கு பணிகள் நடந்தன. இதில், கூடுதலாக, 13,800 இணைப்புகள் கொடுக்கப்பட்டன.
ஜி.எஸ்.டி., சாலையில் மேற்கு பகுதிகளில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை, ரயில்வே லைனை கடந்து புதுவை நகர் வழியாக ரேடியல் சாலை பிரதான குழாயில் கலந்து, கீழ்க்கட்டளை பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்கிறது.
மற்றொரு புறம், 9 மற்றும் 13 முதல் 21 வரையுள்ள வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அருள்முருகன் டவர் வழியாக ரேடியல் சாலையில் கலந்து, பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்கிறது. 23 - 26, 35 - 38 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நெமிலிச்சேரி வழியாக கீழ்க்கட்டளைக்கு செல்கிறது.
பல்லாவரத்தில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வந்து, 11 ஆண்டுகள் ஆன நிலையில், பராமரிப்பில் கவனம் செலுத்தாததால், பல இடங்களில் குழாய்கள் உடைந்து சேதமடைந்துள்ளன. பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில், திரும்பிய இடமெல்லாம், மேன் ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறுவது தொடர் பிரச்னையாக உள்ளது.
மழை காலத்தில் இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்து, சாலைகளிலும், குடியிருப்புகளிலும் கழிவுநீர் தேங்கி மக்கள் பெரும் பிரச்னைக்கு ஆளாகின்றனர். ஓராண்டிற்கு மேலாக நிலவும் இப்பிரச்னைக்கு தீர்வாக, பழைய குழாய்களை அகற்றி, புதிய குழாய் பதிக்க கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, 86 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

