/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கள் இறக்க அனுமதி வேண்டி பனை விவசாயிகள் மறியல்
/
கள் இறக்க அனுமதி வேண்டி பனை விவசாயிகள் மறியல்
ADDED : ஜன 30, 2025 02:10 AM

கூவத்துார்:செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட கடலோர பகுதிகளான கூவத்துார், கடப்பாக்கம், வடபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன.
ஆண்டுதோறும் இப்பகுதியில் பிப்., முதல் ஜூலை வரை பனை தொழிலாளர்கள் கள் மற்றும் பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர்.
கள் மற்றும் பதநீர் விற்பதால் கிடைக்கும் வருமானம், இப்பகுதியில் வசிக்கும் 5,000 மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
தற்போது கள் சீசன் துவங்க உள்ள நிலையில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், கள் இறக்கி விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், வடபட்டினம் முருகன் கோவில் எதிரே கிழக்கு கடற்கரை சாலையில், பனை விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர், கள் இறக்க அனுமதி வழங்க வேண்டி, நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், சம்பவ இடத்திற்கு வந்த கூவத்துார் போலீசார் மற்றும் செய்யூர் வட்டாட்சியர் சரவணன் ஆகியோர், அவர்களிடம் பேச்சு நடத்தி, கள் இறக்க அனுமதி பெறுவது குறித்து, உயரதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, பனை விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.