/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை பணியை முடிக்கக்கோரி பனையூர் மக்கள் போராட்டம்
/
சாலை பணியை முடிக்கக்கோரி பனையூர் மக்கள் போராட்டம்
ADDED : செப் 26, 2025 03:24 AM

செய்யூர்:இடைக்கழிநாடு பேரூராட்சியில், நிறுத்தப்பட்ட சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, பனையூர் கிராமத்தினர் நேற்று, பேரூராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு பனையூர் சின்னகுப்பத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அருகே உள்ள தழுதாளிகுப்பத்திற்கும் பனையூர் சின்னகுப்பத்திற்கும் இடையே உள்ள சாலை, பல ஆண்டுகளாக பழுதடைந்து, மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, இடைக்கழிநாடு பேரூராட்சி 6வது வார்டு சார்பாக, 30 லட்சம் ரூபாயில் சாலையை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வந்தன.
கடந்த சில நாட்களுக்கு, தழுதாளிகுப்பம் கிராமத்தினர், 3வது வார்டுக்கு சொந்தமான இடத்தில், 6வது வார்டு சார்பாக சாலை சீரமைப்பு பணி செய்யக் கூடாது என, பணியை தடுத்து நிறுத்தினர்.
இதனால், இரு மீனவ கிராமங்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இரு கிராமத்தை சேர்ந்த மக்களிடம், வட்டாட்சியர் அலுவலகத்தில், செய்யூர் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று, பனையூர் சின்னகுப்பத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், நிறுத்தப்பட்டுள்ள சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, நேற்று காலை 11:00 மணியளவில், கடப்பாக்கத்தில் உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், வருவாய்த் துறையினர் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தி, விரைந்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.