/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊராட்சி ஒன்று; தொகுதி மட்டும் இரண்டு கருமரப்பாக்கம் கிராமத்தினர் கடும் அவதி
/
ஊராட்சி ஒன்று; தொகுதி மட்டும் இரண்டு கருமரப்பாக்கம் கிராமத்தினர் கடும் அவதி
ஊராட்சி ஒன்று; தொகுதி மட்டும் இரண்டு கருமரப்பாக்கம் கிராமத்தினர் கடும் அவதி
ஊராட்சி ஒன்று; தொகுதி மட்டும் இரண்டு கருமரப்பாக்கம் கிராமத்தினர் கடும் அவதி
ADDED : நவ 17, 2024 07:45 AM

செங்கல்பட்டு : வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள், இரட்டை பதிவு உள்ளவர்களை நீக்கம் செய்ய வேண்டும் என, தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சுருக்குமுறை திருத்தம் 2025ம் ஆண்டுக்கான ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ், கடந்த அக்டோபர்மாதம் 29ம் தேதி வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் சுருக்குமுறை திருத்தம் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் தலைமையில், நேற்று நடந்தது.
கலெக்டர் அருண்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சப் - கலெக்டர் நாராயணசர்மா, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பேசியதாவது:
சிட்லப்பாக்கம் ராஜேந் திரன் - அ.தி.மு.க., மாவட்ட செயலர்: தாம்பரம் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது.
இரட்டை பதிவு வாக்காளர்கள், ஆக்கிரமிப்பு இடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது. இவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
பெருங்களத்துாரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்கு வசதிக்காக, 500 மீட்டரில்ஒட்டுச்சாவடி மையம் அமைக்க வேண்டும். இதனால், தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே கடவுப்பாதையை கடந்து, 3 கி.மீ., சென்று, வண்டலுாரில் ஓட்டுப் போடுகின்றனர்.
சென்னை புறநகர் பகுதியில் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க, இறந்தவர்கள், இரட்டை பதிவு வாக்காளர்கள் பெயர்களை நீக்கினால் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும்.
எஸ்.ஆர்.ராஜா தி.மு.க., - எம்.எல்.ஏ.: தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லுார் ஆகிய சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில், இறந்தவர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்படாமல் உள்ளன. மாநகராட்சி அலுவலகங்களில், இறந்தவர்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியலை வைத்து, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் முழுமையாக ஈடுபடுவதில்லை.
சிவசங்கரன் தேர்தல் பிரிவு தாசில்தார்: செங்கல்பட்டு மாவட்டத்தில், இரட்டை பதிவு உள்ள 2 லட்சத்து 39 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களை நீக்கம் செய்ய 1.50 வாக்காளர்களுக்கு, தபால் வாயிலாக நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.
பின், 15 நாட்களுக்குள்,அந்தந்த தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்களை, வாக்காளர் நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.
அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை என்றால், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு, இரட்டை பதிவை கண்டறிந்து, வாக்குப்பதிவு அலுவலருக்கு அனுப்பி வைப்பர். அதன்பின், இரட்டை பதிவு நீக்கம் செய்யப்படும்.
கலெக்டர் அருண்ராஜ்: சோழிங்கநல்லுார், தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் - தனி, செய்யூர் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள், இரட்டை வாக்காளர்கள் நீக்கம் செய்வது குறித்து, சப் - கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்கள், 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி சரிசெய்ய வேண்டும்.
திருக்கழுக்குன்றம் ஆறு முகம் - அ.தி.மு.க., மாவட்ட செயலர்: திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை ஊராட்சியில், கருமரப்பாக்கம் கிராமத்தினர், திருப்போரூர் சட்டசபை தொகுதிக்கும், நடுவக்கரையைச் சேர்ந்தவர்கள் செய்யூர் தொகுதிக்கும் ஓட்டு போடுகின்றனர்.
ஒரே ஊராட்சியில், இரண்டு தொகுதியில் ஓட்டு போடுகின்றனர். இதனால், வளர்ச்சி பணிகள் செய்வதில் சிக்கல் உள்ளது. இதை மாற்றி, ஒரே தொகுதியில் ஓட்டு போடும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அதன்பின், கோவளம் ஓட்டுச்சாவடி மையத்தில்,சுருக்கமுறை திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமை, மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில்மேஷ்ராம், நேற்று பார்வையிட்டார்.