/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை புறநகர் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதியின்றி பயணியர் தவிப்பு
/
செங்கை புறநகர் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதியின்றி பயணியர் தவிப்பு
செங்கை புறநகர் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதியின்றி பயணியர் தவிப்பு
செங்கை புறநகர் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதியின்றி பயணியர் தவிப்பு
ADDED : ஜூன் 27, 2025 12:46 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு -- தாம்பரம் தடத்தில் உள்ள புறநகர் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணியர் அவதியடைந்து வருகின்றனர். அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டுமென, வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐந்து நகராட்சிகள், எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
இங்கு தனியார் தொழிற்சாலைகள், பள்ளி, கல்லுாரி, தனியார் பல்கலைக் கழகங்கள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன.
செங்கல்பட்டு புறநகர் பகுதிகள், நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றன. மாவட்டத்தில், 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு செங்கல்பட்டில் இருந்து லட்சக்கணக்கானோர் சென்னை நோக்கிச் செல்கின்றனர்.
சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளான மறைமலை நகர், பொத்தேரி, கிளாம்பாக்கம், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகமானோர் வந்து செல்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில், செங்கல்பட்டு புறநகரில் குடியிருப்புகளும் பன்மடங்கு அதிகரித்து உள்ளன.
பேருந்து சேவையை விட, புறநகர் மின்சார ரயில்களையே, பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். பேருந்தில் செல்லும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்குவது, அதிக கட்டணம், நேர விரயம் போன்ற காரணங்களால், ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆனால் செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை ரயில் தடத்தில், செங்கல்பட்டு -- தாம்பரம் வரை உள்ள சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், பொத்தேரி உள்ளிட்ட ஒன்பது ரயில் நிலையங்களில், அடிப்படை வசதிகள் இல்லை.
குடிநீர், கழிப்பறை, மாற்றுத்திறனாளிகள் செல்ல தனி பாதை, நகரும் மின் படிக்கட்டு, மின்துாக்கி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால், ரயில் பயணியர் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து ரயில் பயணியர் கூறியதாவது:
செங்கல்பட்டு -- சென்னை கடற்கரைக்கு தினமும், 60 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில்
பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை.
குறிப்பாக சுத்தமான குடிநீர், கழிப்பறை, கண்காணிப்பு கேமரா, நகரும் படிக்கட்டு, மின்துாக்கி போன்றவை இல்லாததால் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தண்டவாளத்தை கடக்கும் நபர்கள், அடிக்கடி ரயில்களில் அடிபட்டு உயிரிழப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இந்த ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.