/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறவழிச்சாலையில் நிழற்குடையின்றி பயணியர் அவதி
/
புறவழிச்சாலையில் நிழற்குடையின்றி பயணியர் அவதி
ADDED : ஜன 02, 2025 09:00 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு புறவழிச்சாலையில், பயணியர் நிழற்குடை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு புறவழிச்சாலை மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில், சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்கின்றன.
இதேபோன்று, தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகளும் நின்று செல்கின்றன. சுற்றுப்பகுதியிலிருந்து வரும் பயணியர், இங்கிருந்து பேருந்து ஏறிச் செல்கின்றனர்.
ஆனால் இப்பகுதியில், மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலையில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மழை, வெயிலில் நின்று பயணியர் சிரமப்படுகின்றனர். இதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் விபத்து அபாயத்துடன் நிற்க வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, புறவழிச்சாலையில் பயணியர் நிழற்குடை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே, பயணியர் நலன் கருதி, புறவழிச்சாலையில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.