/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை சிற்ப நுழைவுச்சீட்டு சிக்கல் அபாயத்துடன் காத்திருக்கும் பயணியர்
/
மாமல்லை சிற்ப நுழைவுச்சீட்டு சிக்கல் அபாயத்துடன் காத்திருக்கும் பயணியர்
மாமல்லை சிற்ப நுழைவுச்சீட்டு சிக்கல் அபாயத்துடன் காத்திருக்கும் பயணியர்
மாமல்லை சிற்ப நுழைவுச்சீட்டு சிக்கல் அபாயத்துடன் காத்திருக்கும் பயணியர்
ADDED : ஜன 29, 2024 04:30 AM

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களைக் காணவரும் சுற்றுலா பயணியரிடம், தொல்லியல் துறை நுழைவுக் கட்டணமாக, இந்தியரிடம் தலா 40 ரூபாய், வெளிநாட்டவரிடம், தலா 600 ரூபாய் என வசூலிக்கிறது.
கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய சிற்ப பகுதிகளில், நுழைவுச்சீட்டு மையங்கள் உள்ளன.
ஏதேனும் ஓரிடத்தில் பெறப்படும் நுழைவுச்சீட்டில், அனைத்து சிற்பங்களையும் காணலாம். கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள மகிஷாசுரமர்த்தினி, உலகனேஸ்வரர் உள்ளிட்ட குடைவரைகள் உள்ள நிலையில், அங்கு நுழைவுச்சீட்டு மையம் இல்லை. பிற சிற்ப பகுதியில் நுழைவுச்சீட்டு வாங்கி வருவோர், அப்பகுதிக்கு செல்ல சிக்கல் இல்லை.
வேறு சிற்ப பகுதி செல்லாமல், அங்கு நேரடியாக வருவோர், அங்கேயே நுழைவுச்சீட்டு பெற மையம் இல்லை. ஊழியர்கள், வேறு சிற்ப பகுதி சென்று, அதை வாங்கி வருமாறு அல்லது அங்குள்ள க்யூ.ஆர்., குறியீடு மூலம், மொபைல் போனில் 'ஆன்லைன்' சீட்டு பதிவிறக்கி காண்பிக்குமாறு தெரிவிக்கின்றனர்.
இந்த நடைமுறை அறிந்தவர்கள், க்யூ.ஆர்., குறியீடு ஸ்கேனிங்கிற்காக, குறுகிய சாலையில் காத்திருக்கின்றனர். அதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள், அவர்கள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவர்களால், போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. 'ஆன்லைன்' முறை அறியாதவர்கள், நுழைவுச்சீட்டிற்காக, தொலைவில் உள்ள ஐந்து ரதங்கள் அல்லது வெண்ணெய் உருண்டை பாறை சென்று, மீண்டும் திரும்ப வேண்டிய சிக்கலால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இப்பாதிப்பை தவிர்க்க, தொல்லியல் துறை, அப்பகுதியிலும் நுழைவுச்சீட்டு மையம் ஏற்படுத்த வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.