/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்பார்ப்பு அடிப்படை வசதி கிடைக்காததால் மக்கள் தவிப்பு
/
பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்பார்ப்பு அடிப்படை வசதி கிடைக்காததால் மக்கள் தவிப்பு
பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்பார்ப்பு அடிப்படை வசதி கிடைக்காததால் மக்கள் தவிப்பு
பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்பார்ப்பு அடிப்படை வசதி கிடைக்காததால் மக்கள் தவிப்பு
ADDED : பிப் 12, 2025 08:44 PM
பரங்கிமலை- - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு, ராணுவ அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
அங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, ஏழு ராணுவ அதிகாரிகளும், ஏழு மக்கள் பிரதிநிதிகளும் கொண்ட நிர்வாகம் செயல்படுகிறது.
இந்த போர்டிற்கு, சென்னை மண்டல ராணுவ பிரிக்கேடியர் தலைவராகவும், மக்கள் பிரதிநிதிகளில் ஒருவர் துணை தலைவராகவும் இருப்பர்.
திட்டங்களை செயல்படுத்த, கன்டோன்மென்ட் போர்டு நிர்வாக செயல் அதிகாரி உள்ளார். அங்கு நிறைவேற்றும் பணிகளுக்கு, ராணுவ அமைச்சகம் நிதி ஒதுக்குகிறது.
பரங்கிமலை- - பல்லாவரம் பகுதிகளில், ஏழு வார்டுகள் உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு, கன்டோன்மென்ட் போர்டு தேர்தல் நடந்தது.
இதில், ஆறு வார்டுகளில் அ.தி.மு.க.,வும், ஒரு வார்டில் தி.மு.க.,வும் வெற்றி பெற்றன. அவர்களின் பதவிக்காலம், கடந்த 2020, பிப்., மாதத்துடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து, கன்டோன்மென்ட் போர்டுக்கு தேர்தல் நடத்தக்கூடிய வகையில், பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கப்பட்டன.
அதில், நான்கு பெண்களுக்கான தனி வார்டுகளும், ஆறாவது வார்டு பெண்களுக்கான பொதுவாகவும், குலுக்கல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து தேர்தல் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில், நிர்வாக காரணங்களால் தேர்தல் நடத்தப்படாது என, பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக, இதே நிலை நீடிக்கிறது.
அதனால், அங்கு வசிக்கும், 50,000த்திற்கும் மேற்பட்டோர் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், கன்டோன்மென்ட் பகுதிகளில் அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை.
குறிப்பாக, பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதியில், சமுதாய நலக்கூடம், சிறார் பூங்கா, உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம் என, எதுவும் இல்லை.
ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும், ஏழுகிணறு தெருக்கள், ராமநாதபுரம் லேன், மரியபுரம், கலைஞர் நகர் தெருக்கள், மழைநீரால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட விளையாட்டு மைதானம், இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை.
மத்திய அரசு, பல்வேறு கன்டோன்மென்ட் போர்டுகளை, அந்தந்த மாநில உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைத்து வருகிறது. எனவே, பரங்கிமலை- - பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதிகளை, சென்னை, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -