/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.45 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் :திருப்போரூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி
/
ரூ.45 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் :திருப்போரூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி
ரூ.45 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் :திருப்போரூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி
ரூ.45 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் :திருப்போரூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜன 02, 2026 05:15 AM

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்க, 45 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சிஅடைந்து உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னையை ஒட்டிய புறநகரில் வளர்ந்து வரும் பகுதியாக, திருப்போரூர் பேரூராட்சி உள்ளது.
மொத்தம், 15 வார்டுகளை கொண்ட இந்த பேரூராட்சியில் திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம், மேட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கியுள்ளன. இப்பகுதிகளில், 30,000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இது தவிர, திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் சார் - பதிவாளர் அலுவலகம், கந்தசுவாமி கோவில், பேரூராட்சி அலுவலகம், தாலுகா, வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு மற்றும் தனியார் வங்கிகள், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்டவை உள்ளன.
முதலில் குடிநீர் தேவைக்காக, சிறுதாவூர் ஏரி அருகே ஐந்து கிணறுகள் அமைத்து குடிநீர் கொண்டு வரப்பட்டு, திருப்போரூர் பேரூராட்சி பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், செம்பாக்கம் ஏரி மற்றும் கொண்டங்கி ஏரிகளில் குடிநீர் கிணறுகள் அமைத்து, அந்த குடிநீரும் கூடுதலாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மேற்கண்ட பகுதிகளிலிருந்து திருப்போரூர் பேரூராட்சி பகுதிக்கு, ஒரு நாளைக்கு, 12 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்போரூர் பேரூராட்சி பகுதிகள் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருவதால், இப்பகுதிகளில் மக்கள் மனை வாங்கி, வீடுகள் கட்டி குடியேறி வருகின்றனர்.
திருப்போரூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், திருப்போரூர் பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
இதனால், குடிநீர் தேவை அதிகரித்தது. கூடுதலாக குடிநீர் வழங்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, கூடுதலாக குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 32 கி.மீ.,க்கு குடிநீர் குழாய் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
வல்லிபுரம் பாலாற்றில், ஐந்து புதிய கிணறுகள், வல்லிபுரம் மற்றும் திருக்கழுக்குன்றத்தில் தலா ஒரு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள், திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
தற்போது, அதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இதனால், திருப்போரூர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

