/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூட்டிக் கிடக்கும் வெங்கலேரி ரேஷன் கடை 2 கி.மீ., நடையாய் நடக்கும் மக்கள்
/
பூட்டிக் கிடக்கும் வெங்கலேரி ரேஷன் கடை 2 கி.மீ., நடையாய் நடக்கும் மக்கள்
பூட்டிக் கிடக்கும் வெங்கலேரி ரேஷன் கடை 2 கி.மீ., நடையாய் நடக்கும் மக்கள்
பூட்டிக் கிடக்கும் வெங்கலேரி ரேஷன் கடை 2 கி.மீ., நடையாய் நடக்கும் மக்கள்
ADDED : செப் 03, 2025 01:00 AM

திருப்போரூர்:வெங்கலேரி கிராமத்தில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரேஷன் கடை செயல்படாத நிலையில் உள்ளது.
இக்கடையில் உணவு பொருட்கள் வினியோகம் செய்யாவிட்டால், போராட்டம் நடத்த இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்போரூர் அடுத்த ஆலத்துார் ஊராட்சி, வெங்கலேரி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு செயல்பட்ட ரேஷன் கடை, 40 ஆண்டுகளுக்கு முன், பல்வேறு காரணங்களால், 2 கி.மீ., துாரத்திலுள்ள ஆலத்துார் கிராமத்திற்கு மாற்றப்பட்டது.
இதனால் வெங்கலேரி கிராமத்தினர் 2 கி.மீ., துாரம் சென்று, ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வர சிரமப்பட்டனர். ஆதரவு இல்லாத வயதானோர், உணவு பொருட்களை தலையில் சுமந்து வரும் நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக, வெங்கலேரி கிராமத்தில் புதிய கட்டடம் கட்டி, ரேஷன் கடை அமைக்க வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, 2024ல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 9.77 லட்சம் ரூபாய் மதிப்பில், வெங்கலேரியில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த ஜூலை 4ல் திறக்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை இந்த கடையில் ரேஷன் பொருட்கள் வினியோகம் துவக்கப்படவில்லை. இதனால், வெங்கலேரி கிராமத்தினர் பழையபடி, 2 கி.மீ., துாரம் சிரமப்பட்டு சென்று, ஆலத்துாரில் செயல்படும் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதுகுறித்து, வெங்க லேரி கிராமத்தினர் கூறியதாவது:
வெங்கலேரியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, இப்பகுதி வார்டு கவுன்சிலர் சாவித்ரியிடமும், குறைதீர் கூட்டத்திலும் புகார் மனுக்கள் அளித்துள்ளோம்.
ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், பழையபடி ஆலத்துார் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வயதானவர்கள், பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த விஷயத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், இந்த மாதம் ஆலத்துார் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
இதற்கும் நடவடிக்கை இல்லாவிட்டால், அடுத்த மாதம் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.