/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
65 இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலைய பணிகள்...இழுத்தடிப்பு: நிலம் ஒப்படைப்பதில் வருவாய்த்துறையினர் மெத்தனம்
/
65 இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலைய பணிகள்...இழுத்தடிப்பு: நிலம் ஒப்படைப்பதில் வருவாய்த்துறையினர் மெத்தனம்
65 இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலைய பணிகள்...இழுத்தடிப்பு: நிலம் ஒப்படைப்பதில் வருவாய்த்துறையினர் மெத்தனம்
65 இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலைய பணிகள்...இழுத்தடிப்பு: நிலம் ஒப்படைப்பதில் வருவாய்த்துறையினர் மெத்தனம்
ADDED : நவ 22, 2025 01:29 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், நிரந்தர அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க 65 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த இடங்களை ஒப்படைப்பதில் வருவாய்த் துறை அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்வதால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு, வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட பகுதிகளில் பாலாறு நீர், ஆழ்துளைக் கிணறு, கிணற்று நீர் மற்றும் ஏரிகளின் நீரைப் பயன்படுத்தி, விவசாயம் செய்யப் படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில் சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய பருவங்களில், நெல் அதிகம் பயிரிடப் படுகிறது.
மற்ற தாலுகாக்களில், குறைவாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
அறுவடை செய்யப்பட்ட நெல்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
இங்கு நெல் விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. இதற்காக மாவட்டத்தில், திறந்தவெளியில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை மூட்டைகளாகவும், குவியலாகவும் குவித்து வைக்கின்றனர்.
அப்போது, திடீரென மழை பெய்தால், நெல் மூட்டைகள் மற்றும் குவித்து வைக்கப்படும் நெல் நனைந்து, ஒரு சில நாளில் அது முளைத்து வீணாகிறது.
இதை தவிர்க்க, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, நெல் மூட்டைகளை இருப்பு வைக்க கிடங்குகள் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
மாவட்ட விவசாய நலன் காக்கும் கூட்டத்திலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் கிடங்குகள் அமைத்து தர வேண்டும் என, விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்த கோரிக்கையை ஏற்று, 'நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, செங்கல்பட்டு மாவட்ட அப்போதைய கலெக்டர் ராகுல்நாத் உறுதி அளித்தார்.
அதன் பின் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள பொன்விளைந்தகளத்துார், மணப்பாக்கம், வெள்ளப்பந்தல், இரும்புலிச்சேரி, எடையத்துார், நெரும்பூர், கடலுார், அணைக்கட்டு, பூதுார், வீரணாக்குண்ணம், தச்சூர், ஓணம்பாக்கம், செம்பூர், வெடால், அரசூர், சிறுமையிலுார், பாலுார், அம்மனுார் உள்ளிட்ட, 65 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும், நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டவும் திட்டமிட்டு மாவட்ட கலெக்டருக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் அறிக்கை அனுப்பினர்.
அதன் பின், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும்படி, மாவட்ட வருவாய் அலுவலருக்கு, அப்போதைய கலெக்டர் ராகுல்நாத், 2023ம் ஆண்டு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஆனால், இடம் தேர்வு செய்து, நிலம் ஒப்படைக்கும் பணியில் வருவாய்த் துறையினர் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். எனவே, விவசாயிகள் நலன் கருதி, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கி தர, வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், திறந்தவெளியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த நிலையங்களில் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. அப்போது மழை பெய்யும் போது, நெல் மூட்டைகள் நனைவதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க, நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டித்தர, மாவட்ட கலெக்டர் சினேகா மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.பாபு,
விவசாயி, மெய்யூர், மதுராந்தகம்

